×

அசத்தல் திட்டம்

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். ஒவ்வொரு திட்டமும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் நாடு கடந்தும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ‘தோழி’ விடுதிகள் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகளை தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் அடுத்தடுத்து கூடுதல் விடுதிகள் திறக்கப்பட உள்ளன. தோழி விடுதிகள் திட்டம் அனைத்து தரப்பினர் இடையேயும் மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

படித்து முடித்த பெண்களுக்கு வெளியூரில் வேலை கிடைத்தாலும், பாதுகாப்பான தங்கும் இடம் கிடைக்காததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். இதனால் பெரும்பாலான பெண்கள் பணியில் சேருவதை தவிர்த்தனர். வெளியூரில் பாதுகாப்பாக தங்கும் இடத்தை தேர்வு செய்வதில் கடும் இன்னல்களை சந்திக்க நேரிட்டது. அவ்வாறு தங்குமிடம் கிடைத்தாலும் பாதுகாப்பு, வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் கேள்விக்குறியாக இருந்தது. இதனால் வெளியூரில் பணி என்றால், பெண்கள் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டத்தால், இனி வெளியூரில் இருந்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் அதிகளவில் வேலைக்கு செல்வார்கள். நகர் பகுதிகளில் பாதுகாப்பான தங்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பெண்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டங்களும் பயனாளிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக உயர்ந்துள்ளது. மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கச்சிதமாக திட்டங்களை அறிவித்து வருவதால், அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘தோழி விடுதி’ திட்டமும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். நாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதில், இரண்டு விஷயங்கள் அடிப்படையாக உள்ளது. கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம். நாட்டியிலேயே கல்விக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு அரசு கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கி வருகிறது.

இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர தொடங்கியுள்ளது. முக்கியமாக, பெண்கள் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பான தங்கும் இடம் கிடைக்காமல் திண்டாடி வருவதை அறிந்து, தோழி விடுதிகள் மூலம் அந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கையால் பெண்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், வளர்ச்சி என்ற இலக்கை விரைவில் அடைந்து விடலாம். ‘தோழி விடுதி’ திட்டம் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயம் நிலைகொள்ளும்.

The post அசத்தல் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Chief ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...