×

சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்துள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் சேவையை அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து வருகிறார். நாடு முழுவதும் தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை இந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை – மைசூரு, சென்னை – கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க உள்ளது. அதே போல்,சென்னை-திருநெல்வேலி-சென்னை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே திருநெல்வேலி-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பராமரிப்பு பணி தொடர்பான பணிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டும் என மதுரை கோட்ட மேலாளர் ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது, திருச்சி – மதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகிறது. தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகள் உள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும். வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், வந்தே பாரத் ரயிலை முதற்கட்ட சோதனை அடிப்படையில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சோதனை வெற்றி பெற்றால் அடுத்த 5 நாட்களில் வந்தே பாரத் ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

The post சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai- ,Nellai ,Chennai ,Elumpur- ,Tirunelveli ,Chennai-Nellai ,
× RELATED தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிப்பு!!