
சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ. 393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அதிநவீன பஸ் நிலையத்தை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்டி சாலை கிளாம்பாக்கத்தில் 110 ஏக்கரில், சிஎம்டிஏ நிர்வாகம் ரூ. 393.74 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் முனையத்தை 2019-ம் ஆண்டு முதல் கட்டி வருகிறது. தற்போது 99% பணிகள் முடிந்துள்ளது. இந்த பஸ் முனையத்தில் 226 புறநகர் பேருந்துகளும், 164 அரசு பஸ்களும், 62 ஆம்னி பஸ்களும் வந்து செல்லலாம். அதுமட்டுமல்லாமல் 8 நடைமேடைகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகளும் உள்ளன. மேலும் பயணிகளுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர், வெளிச்சம், தானியங்கி நடைமேடைகள் ஆகிய வசதிகளும் இருக்கிறது.
10-க்கு 10 அளவு கொண்ட 100 கடைகளும், 4 உணவு கூடங்களும், 4 ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்துக்கு என்று தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நவீன பேருந்து நிலையத்தை தமிழக அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, சிஎம்டிஏ நிர்வாக முதன்மை செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனாவிடம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
The post கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் அதி நவீன பஸ் நிலையத்தை தலைமை செயலாளர் ஆய்வு: அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.