×

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி நடப்பதால் வைகை, பல்லவன் ரயில்கள் இன்று முழுமையாக ரத்து

சென்னை: வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலும், சுற்று வட்டாரப் பகுதியிலும் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும்போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, ரயில்களை சீராக இயக்க ஏதுவாக, திருச்சி சந்திப்பில் 10வது புதிய வழித்தடம் மற்றும் 8வது புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த, 20ம் தேதி முதல் தொடங்கியது. இதேபோன்று கல்லுக்குழி அருகே 3வது நுழைவு வாயில் அமைக்கும் பணியும் தொடங்கியது.

உயர் மின் அழுத்த கேபிள்கள் மறுசீரமைத்தல், சிக்னல் கேபின்களை சரிசெய்தல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது, தண்டவாளங்களில் சிக்னல்களை சரியாக இயக்க உதவும் ‘இன்டர் லாக்கிங் சிஸ்டம்’ பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், திருச்சி சந்திப்பில் ரயில் சிக்னல்கள் தானியங்கிக்கு பதிலாக ஊழியர்களால் இயக்கப்படுகிறது. இதனால், அவ்வழியாக வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு திருச்சி ஜங்ஷனை கடந்து ெசல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னைக்கு அதிகாலை வரவேண்டிய தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் நேற்று 5 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதிலேயே பயணிகள் அமர்ந்திந்தனர்.

இன்டர்வியூ, வியாபாராம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் ரயிலிலேயே அமர்ந்திருந்தனர். பாண்டியன், நெல்லை, பொதிகை, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நேற்று 2 முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வர வேண்டிய ரயில், 5 மணி நேரம் தாமதமாக காலை 6 மணிக்கு திருச்சிக்கு வந்ததது. திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பல்லவன் ரயில் காலை 6 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். திருச்சியில் இருந்து நேற்று காலை புதுக்கோட்டை செல்லவிருந்த முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, திருச்சி – தஞ்சாவூர், திருச்சி – மயிலாடுதுறை, மயிலாடுதுற – விழுப்புரம் மற்றும் திருச்சி – கரூர் ஆகிய 8 முன்பதிவில்லாத விரைவு ரயில் சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டர் லாக்கிங்’ பணிகள் இன்று மாலைக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

The post திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி நடப்பதால் வைகை, பல்லவன் ரயில்கள் இன்று முழுமையாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Pallavan ,Trichy ,Chennai ,Pallavan Express ,Trichy Junction ,Dinakaran ,
× RELATED வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?