×

இன்று கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு; வரலாற்றை மாற்றுமா வெஸ்ட் இண்டீஸ்?

டரோபா: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, டிரினிடாடில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த வெ.இண்டீஸ் ஒருநாள் தொடரை வென்று பதிலடி தர முனைப்பாக உள்ளது. அதி்லும் 2வது ஒருநாள் போட்டியில் கடினமான ஆடுகளத்திலும் இந்தியாவை சாய்க்கும் அளவுக்கு அதன் கேப்டன் ஷாய் ஹோப் உள்ளிட்ட வீரர்கள் ஆட்டத்திறனுக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

அதே சமயம், தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கைநழுவி போகக் கூடும் என்பதால் இந்தியாவும் எச்சரிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்ளும். அதனால் 2வது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோகித், நட்சத்திர வீரர் விராத் இருவரும் மீண்டும் அணிக்குத் திரும்புவது உறுதி. பேட்டிங் வரிசையில் பரிசோதனை முயற்சிகள் எதுவும் இருக்காது என்றும் நம்பலாம். 2006க்கு பிறகு, இந்தியா ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீசிடம் இழந்ததில்லை என்ற வரலாறு உள்ளது. அதை தக்கவைக்க இந்தியா முனைப்புக் காட்டும். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு குறைந்த அவகாசமே உள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிக அவசியமானதாக உள்ளது.

நே ரு க் கு நே ர்
* வெஸ்ட் இண்டீஸ் அணி 2006ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
* இரு அணிகளும் இதுவரை 141 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 71 முறையும், வெ.இண்டீஸ் 64 முறையும் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் சரிநிகர் சமனில் (டை) முடிய, 4 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.
* இந்தியாவில் 2006/07ல் நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீசை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா தொடர்ந்து 2009 (2-1), 2011 (3-2), 2011/12 (4-1), 2013/14 (2-1), 2014/15 (2-1), 2017 (3-1), 2018/19 (3-1), 2019 (2-0), 2019/20 (2-1) 2021/22 (3-0), 2022 (3-0) என இந்தியாவே தொடர்ச்சியாக 12 தொடர்களையும் கைப்பற்றி உள்ளது.
* இந்த 2 அணிகளும் மோதிய 23 ஒருநாள் தொடர்களில் இந்தியா 15-8 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* தனது சொந்த மண்ணில் வெ.இண்டீஸ் 21 ஆட்டங்களில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. 20ல் தோற்றுள்ளது.
* கோஹ்லி 102 ரன் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
* ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட வெ.இண்டீஸ் கேப்டன் ஹோப்புக்கு இன்னும் 65 ரன் தேவை.

The post இன்று கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு; வரலாற்றை மாற்றுமா வெஸ்ட் இண்டீஸ்? appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Daroba ,Trinidad ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...