- சாலையோர தாஸ்மேக்
- மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலை
- பூன்சேரி ஜங்ஷன்
- மாமல்லபுரத்தில்
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை
- பூன்சேரி
- பூனேரி
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை, பூஞ்சேரி ஆகிய இடங்களில் சாலையோரத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட 5 இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 3 டாஸ்மாக் கடைகள் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 2 கடை, பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையொட்டி ஒரு கடை என 3 டாஸ்மாக் கடைகளும் சாலையோரத்தில் செயல்பட்டு வருகிறது.
அதுவும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது குடிப்பவர்களின் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. இங்கு, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரம் நகரம், பூஞ்சேரி சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் அதிக அளவு கடைகள், சிற்பக் கூடங்கள், ஓட்டல் மற்றும் ரிசார்ட்டுகள், குடியிருப்புகள், ஏடிஎம் மற்றும் வங்கிகள் போன்றவை உள்ளன. இங்கு, டாஸ்மாக் கடைக்கு வருபவர்களின் செயல்பாடுகளால் பல தரப்பட்ட மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிகளவில் வாகனங்களில் வரும் இளைஞர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்தி விட்டு டாஸ்மாக் கடைகளுக்கு சென்று விடுவதால் சாலையில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையோரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், இதுநாள் வரை மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகள் மாற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைக்கு வருபவர்களால் மற்ற வாகனங்கள் அவ்வளவு எளிதாக சாலையில் செல்ல முடியாத சூழல் உள்ளது. இரவு நேரங்களில் இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே, சாலை ஓரத்தில் உள்ள கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைக்கு வருபவர்களில் சிலர் மது வாங்கி அங்கேயே குடித்துவிட்டு ரோட்டிற்கு தள்ளாடி வந்து ஒருவரையொருவர் திட்டி சண்டையிட்டு வருகின்றனர். இதனால், அந்தப்பகுதியை கடந்து செல்ல பெண்களும், சிறுவர்களும் அச்சப்படுகின்றனர். மேலும், இவர்கள் செய்கிற அட்டகாசத்தால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும் பாதிப்படைகின்றனர். மேலும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக இருப்பதால் அந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர்.
The post மாமல்லபுரம் இசிஆர் சாலை, பூஞ்சேரி சந்திப்பில் சாலையோரத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள்: போக்குவரத்து நெரிசலால் தொடரும் விபத்துகள் appeared first on Dinakaran.