×

சுகேஷ் ரூ.200 கோடி மோசடி வழக்கில் 2 நடிகைகள் பரபரப்பு மோதல்: நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா பதேகி கிரிமினல் வழக்கு தாக்கல் செய்து வாக்குமூலம் அளித்தார். இரட்டை இலையை பெற்றுத்தருவதாக கூறி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் பணம் பெற்ற வழக்கில் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இருந்தபடியே தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் என்பவரின் மனைவி அதிதியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த வழக்கில் சுகேசின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். நடிகைகளை சிறைக்கும் வரவைத்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை அநியாயமாக இழுத்துவிட்டதாக கூறி நடிகை நோரா பதேகி டெல்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மாஜிஸ்திரேட் கபில் குப்தா முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

அவரது மனுவில் கூறியிருப்பதாவது: கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ள என்னை ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அநியாயமாக இழுத்து, அவதூறாகப் பேசியுள்ளார். அவரது கருத்தை வெளியிட்டு 15 ஊடக நிறுவனங்கள் பொய்யான கதைகள் மூலம் மக்கள் பார்வையில் எனது நற்பெயரைக் கெடுத்துவிட்டனர். அவர்கள் சுகேஷிடம் பணத்திற்காக பழகி பணம் பறிப்பவர் என்று அழைத்தனர். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. சினிமாத்துறையில் எனக்கு வாய்ப்பு குறைந்து விட்டது. பெரிய நிதி இழப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நபர்களைப் பாதுகாப்பதற்காக ஊடகங்களில் இந்த வழக்கில் நான் பலிகடாவாகப் பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். மேலும் நான் ஒரு வெளிநாட்டவர் என்பதால், நான் ஒரு மென்மையான இலக்காகப் பயன்படுத்தப்பட்டேன். இதனால் எனது தொழிலுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வேண்டும். ஏனெனில் தொழிலில் நியாயமான நிலையில் என்னுடன் போட்டியிட முடியாத நிலையில் நடிகை ஜாக்குலினால் மோசமான நோக்கத்துடன் அவதூறான அறிக்கை வெளியிடப்பட்டது.

சுகேஷிடம் இருந்து நான் பரிசு பெற்றதாக ஜாக்குலின் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் செல்போனில் சுகேஷிடம் பேசினேன். அதற்காக எனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பையை அவரது மனைவி லீனா பரிசாக வழங்கினார். ஆனால் சுகேஷிடம் இருந்த எந்த பரிசும் நான் வாங்கவில்லை. அவரிடம் இருந்து சொகுசு கார் நான் வாங்கியதாக கூறுவது தவறு. ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக எனது மைத்துனர் பாபி கானுக்கு வழங்கப்பட்ட சம்பள பணத்தின் இது ஒரு பகுதிதான் அந்த கார். எனவே நடிகை ஜாக்குலின் குற்றச்சாட்டும், அதை ஊடக நிறுவனங்கள் வெளியிடுவதும் உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சுகேஷ் ரூ.200 கோடி மோசடி வழக்கில் 2 நடிகைகள் பரபரப்பு மோதல்: நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sukesh ,New Delhi ,Jacqueline Fernandez ,Sukesh Chandrasekar ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...