×

நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தற்காலிக பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பயனடையலாம் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) கீழ் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கண்டறிந்து வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பத்தினை மண்டல அலுவலகம், சென்னை மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேரலாம். அரசு, அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இவ்வாரியத்தில் பயன் பெற இயலாது. இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மகப்பேறு உதவி தொகை, விபத்துக் காப்பீடு, இயற்கை மரண உதவித் தொகை போன்ற பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டை பெற்றவர்கள் உதவித் தொகைகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது 5 தூய்மை பணியாளர்களுக்கு திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் இயற்கை மரண உதவித் தொகைகளுக்கான காசோலைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.அனுசியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீ.சரஸ்வதி மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் எல்.தனலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

The post நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தற்காலிக பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Board ,Chennai ,Tamil Nadu ,Sanitation Workers Welfare Board ,Welfare Board ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகள் மற்றும்...