×

மயிலாப்பூர் ஆடிட்டர் மனைவி கொலை வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதம்

சென்னை: மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ஆடிட்டர் ஸ்ரீகாந்த்( 56). இவரது மனைவி அனுராதா (52). இந்த தம்பதியரின் மகள், மகன் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். மகளின் பிரசவத்துக்காக, தன் மனைவியுடன் அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், கடந்த 2022ம் ஆண்டு மே 7ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டிற்கு வந்த இருவரையும், கார் டிரைவர் கிருஷ்ணன், அவரது நண்பர் ரவிராய் இணைந்து, கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்து, சூளேரிக்காட்டில் உள்ள ஸ்ரீகாந்த் பண்ணை வீட்டில் புதைத்தனர்.

பின்னர் ஸ்ரீகாந்தின் காரில் தப்பியோடினர். கொலை குறித்து விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணன், ரவிராயை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,139 சவரன் தங்க நகைகள், 53 கேரட் வைர நகைகள், 57 வெள்ளி நகைகள், காரையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீது கூட்டுச்சதி, கொலை உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 64 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன் நடந்து வருகிறது. வழக்கின் சாட்சி விசாரணை பிப்ரவரியில் துவங்கியது. வழக்கில் இதுவரை 35க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வழக்கு, மீண்டும் நீதிபதி ஜெ.சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணன், ரவிராய் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி வழக்கின் விசாரணையை நான்கு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூறி, அது தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post மயிலாப்பூர் ஆடிட்டர் மனைவி கொலை வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதம் appeared first on Dinakaran.

Tags : Mayilapur ,Chesons Court ,Chennai ,Auditor ,Srikanth ,Birindavan Nagar ,anurada ,Mayalapur Auditor ,Court of Chesons ,Dinakaran ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை