×

பொதுமக்களிடம் பல ஆயிரம் மோசடி பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜாவின் சகோதரி கைது: இங்கிலாந்தில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

திருச்சி: பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைகாட்டி பல ஆயிரம் மோசடி செய்த பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜாவின் சகோதரி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் மற்றும் நிலம் தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இதைநம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் சொன்னபடி லாபம் மற்றும் முதலீட்டு பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து எல்பி நிதி நிறுவனம், அறம் மக்கள் நலச்சங்கம் டிரஸ்ட், அறம் டிவி சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித்தாள் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகின. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் எல்பி நிதிநிறுவனத்திற்கு எதிராக 2013ம் ஆண்டு விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் பதியப்பட்ட வழக்கு மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியான எல்பின் நிறுவன நிர்வாக இயக்குநரான பாஜ முன்னாள் நிர்வாகி ராஜா (எ) அழகர்சாமி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அவரது சகோதரி நிர்மலா (43) பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் இவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நிர்மலா வெளிநாட்டில் இருந்ததால் இமிகிரேஷன் அதிகாரிகளால் லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் இங்கிலாந்திலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த நிர்மலா, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும் இருக்கும் 257 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட பணம் தேர்தலுக்கு செலவு செய்தது கண்டறிப்பட்டு பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களிடம் பல ஆயிரம் மோசடி பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜாவின் சகோதரி கைது: இங்கிலாந்தில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Elbin Raja ,Chennai airport ,England ,Trichy ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!