×

3 கிலோ மீட்டர் நடந்ததற்கே சொகுசு விடுதி வேண்டுமாம்…அண்ணாமலையின் ஸ்டார் ஓட்டல் ‘கலாட்டா

 

* 5 மணி நேரம் காக்க வைத்து புறக்கணித்ததால் பாஜ நிர்வாகிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்

பரமக்குடி: பரமக்குடியில் பாதயாத்திரை வந்த அண்ணாமலை, அங்கு ஸ்டார் ஓட்டல் இல்லாததால் நெசவாளர்கள், விவசாயிகள், சமூக அமைப்பினரை சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு ராமநாதபுரம் சென்றார். இதனால் அவர்கள் பாஜ நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடத்தி வரும் பாதயாத்திரையில், சாலையை ஆக்கிமிரத்து பாஜவினர் அடவாடி செய்வதால் செல்லும் இடமெல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முதுகுளத்தூருக்கு நேற்று முன்தினம் அண்ணாமலை பாதயாத்திரையாக வந்தபோது, அரசு பஸ்களை நிறுத்தி பாஜவினர் ரகளை செய்தனர். இதனால், கைக்குழந்தைகளுடன் பெண்கள் 2 கி.மீ தூரம் நடந்து சென்றனர். தட்டிக்கேட்ட டிஎஸ்பியை அண்ணாமலையின் வலதுகரம் அமர் பிரசாத் ரெட்டி மிரட்டினார். தொடர்ந்து பரமக்குடியில் 4 மணிக்கு யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 6 மணிக்கு வந்த அண்ணாமலை பரமக்குடியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று இரவு 7 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கினார். லேனா மஹால் பகுதிக்கு 3 கிமீ தூரம் மட்டுமே நடந்து சென்று முடித்துக் கொண்டார்.  பாதயாத்திரையின்போது பரமக்குடியில் உள்ள சமூக அமைப்புக்கள், சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், நெசவாளர்கள், விவசாயிகள் சங்கத்தினரை அண்ணாமலை சந்தித்து பேசுவதாக உள்ளூர் பாஜ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்ணாமலை தங்குவதற்காக நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக சொகுசு அறைகள் இல்லாததால் அவர் அதிருப்தி அடைந்தார். இதனால் நெசவாளர்கள், விவசாயிகளை புறக்கணித்த அண்ணாமலை, சுமார் 40 கி.மீட்டர் தூரம் வாகனத்தில் பயணித்து ராமநாதபுரத்துக்கு சென்று தங்கினார். இதை கேள்விப்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள், 5 மணி நேரமாக எங்களை எதற்கு வெயிலில் காக்க வைத்தீர்கள் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சொகுசு வசதிகளுடன் ஒரு பஸ்சை தயார் செய்து அதில் அண்ணாமலை பயணித்து வருகிறார். தினமும் மிக மிக குறைந்த கிலோ மீட்டர் மட்டுமே நடக்கிறார். மற்ற நேரங்களில் சொகுசு பஸ்சில் பயணிக்கிறார். தான் எளிமையானவன் என்று சொல்லும் அண்ணாமலை, நட்சத்திர ஓட்டல் இல்லாததால் திரும்பி சென்றதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக பாத யாத்திரை நிகழ்ச்சி என்ற பெயரில் பாஜவினர் அரங்கேற்றிய கூத்துகளால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

* வாகனத்தில் பாஜ கொடியுடன் சிறுவர்கள் ஆபத்தான பயணம்

பரமக்குடி பாத யாத்திரை பயணத்தின்போது, ஆட்கள் கிடைக்காததால் பாஜ நிர்வாகிகள் சிறுவர்களை அழைத்து செல்கின்றனர். பரமக்குடியில் பாஜ ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சிறுவர்கள் கட்சிக்கொடியுடன் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சரக்கு வாகனத்தின் உச்சியில் அமர்ந்தபடி மிகவும் நெருக்கமான பரமக்குடி வீதிகளில் பயணம் செய்தது அச்சுறுத்தலாக இருந்தது. சிறுவர்களை உயிரை பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபடுத்திய பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post 3 கிலோ மீட்டர் நடந்ததற்கே சொகுசு விடுதி வேண்டுமாம்…அண்ணாமலையின் ஸ்டார் ஓட்டல் ‘கலாட்டா appeared first on Dinakaran.

Tags : Annamalai's Star Hotel 'Galata ,BJP ,Paramakkudi ,Annamalai's Star Hotel 'Kalata ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...