×

ஆடி மாதத்தையொட்டி விராலிமலையில் களைகட்டிய சந்தை; ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

விராலிமலை: விராலிமலையில் ஆடி மாதத்தையொட்டி இன்று காலை களை காட்டிய ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று(31ம் தேதி) விராலிமலை வார சந்தை வழக்கம் போல் அதிகாலை கூடியது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரண்டனர்.

ஆடி மாதம் என்பதால் கிராம பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் ஆடி மாதத்தில் வாகனங்களுக்கு பூஜை செய்து, காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து உறவினர்களுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம். மேலும் மொய்விருந்து, காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சடங்குகள் நடைபெறும். இதிலும் அசைவ விருந்து அளிக்கப்படும். இதனால் ஆடு மற்றும் கோழிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இன்று விராலிமலையில் கூடிய ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. ஆடுகள் குறைந்தது ரூ.5000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது.

வெள்ளாடுகளின் விலை அதிகமாக இருந்த போதும் விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் போட்டி, போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். இதனால் வர்த்தகம் சுமார் ஒரு கோடி ரூபாயை தாண்டியது. சந்தைக்கு கொண்டு வந்த அனைத்து ஆடுகளும் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது போன்ற விசேஷ காலங்களில் தான் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post ஆடி மாதத்தையொட்டி விராலிமலையில் களைகட்டிய சந்தை; ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Audi ,Viralimalai ,Viralimalayas ,Viralimalaya ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி