×

ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் ஜோரூட்டை போல்டாக்கினார்; அஸ்வின், லயன் செய்யாததை செய்து காட்டிய டாட் மர்பி: ஆஸிக்கு வெற்றி வாய்ப்பு?

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் 9வது விக்கெட்டாக களமிறங்கிய இளம் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்ஃபி 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் இவரின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற முக்கிய காரணமாக அமைந்தது. இதன்பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதனால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி டாட் மர்ஃபியை முன்னிறுத்தியது.

குறிப்பாக ஜோ ரூட்டை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போது, டாட் மர்ஃபி வீசிய பந்தில் போல்டாகி 91 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து 81.5 ஓவர்களில் 395 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தனது கடைசி டெஸ்டில் ஆடும் ஸ்டூவர்ட் பிராட் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் இளம் வீரரான டாட் மர்ஃபி பந்தில் போல்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுழல் ஜாம்பவான்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் கூட இதுவரை ஜோ ரூட்டை போல்ட் முறை விக்கெட் வீழ்த்தியதில்லை. இதுவரை 237.3 ஓவர்கள் வீசியும் இரு ஜாம்பவான்களால் முடியாததை, 22 வயதேயான இளம் வீரர் செய்து காட்டியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான டாட் மர்ஃபி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 4 போட்டிகளில் விளையாடிய டாட் மர்ஃபி விராட் கோஹ்லி விக்கெட் உட்பட மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மைதானத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வருவதால், லயனுக்கு பின் டாட் மர்ஃபி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக இருப்பார் என்று பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 384 ரன் எடுத்தால் வெற்றி என்ற 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவும், டேவிட் வார்னரும் வலுவான தொடக்கம் உருவாக்கினர். இங்கிலாந்தின் பவுன்சர் யுக்தியை தகர்த்து இருவரும் அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலியா 38 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கவாஜா 69 ரன்களுடனும் (130 பந்து, 8 பவுண்டரி), வார்னர் 58 ரன்னுடனும் (99 பந்து, 9 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்கள். வெற்றிக்கு மேற்கொண்டு 249 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்னும் ஒரு நாள் எஞ்சியிருப்பதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வாகை சூடினால் தொடரை 3-1 என்ற கணக்கில் சொந்தமாக்கும். இங்கிலாந்து வென்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் ஜோரூட்டை போல்டாக்கினார்; அஸ்வின், லயன் செய்யாததை செய்து காட்டிய டாட் மர்பி: ஆஸிக்கு வெற்றி வாய்ப்பு? appeared first on Dinakaran.

Tags : Ashes ,Jorut ,Ashwin ,Lion ,Todd Murphy ,Aussie ,London ,Ashes Test ,England ,Australia ,London Oval ,Dodd Murphy ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...