×

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 3-ம் கட்டமாக 300 நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள், நியாய விலைக் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக விலை கொடுத்து வாங்கி குறைந்த விலையில் நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்துள்ளோம்.

வெளிச்சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.180 வரை உயர்ந்தாலும் அரசு சார்பில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். விளைச்சல் குறைந்ததன் காரணமாகவே ஏற்பட்ட இயற்கையான விலையேற்றம் தவிர செயற்கையான விலையேற்றம் இல்லை. மக்களின் மீது சுமை சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமைக் கடைகள், அம்மா உணவகங்கள் மூலம் 4 மடங்கு அதிகமாக தக்காளி விற்பனையாகிறது. கடை ஒன்றுக்கு 50 கிலோ தக்காளி விற்பனைக்காக வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Periyakaruppan ,Chennai ,Periyakarappan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...