×

விபீஷணன் செய்தது சரியா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தடைகளும் விடைகளும்

பட்டிமன்றங்கள் துவங்கி விவாதங்கள் வரை, பேசப்படும் விஷயம், விபீஷணன் பற்றிய விஷயம்தான். ஒருவர் கட்சி மாறிவிட்டால், வீடணனாகிவிட்டான் என்றே குற்றம் சாட்டுகின்றனர். இது முறையான ஆய்வா என்பதைப் பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இதை, தடை விடைகளாக ஆராய்வோம்.

* விபீஷணன் குலத்துரோகியா?

குலத்துரோகி என்றால், தன் குலத்துக்குக் கெட்ட பெயர் சம்பாதித்துத் தருபவன். தனது தவறான செயலால், தனது ஆணவத்தால், தன்னைச் சேர்ந்தவர்களுக்குப் பேராபத்து விளைவிப்பவன். ஆனால், விபீஷணன் அப்படிச் செய்யவில்லை. செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டு (பிறர் மனைவியைக் கடத்தி வந்து) அதற்குரிய விளைவுகளை ராவணன் அனுபவிக்கும்போது, “அவளை விட்டு விடு, இல்லை நம் குலத்துக்கு தீராத பழி சேரும்”, என்று திரும்பத் திரும்ப வாதிட்டு, செய்யக்கூடாது என்று தடுத்தவன் எப்படி குலத் துரோகியாக முடியும்! விபீஷணன் குலத்துரோகி என்பதை அரக்கர்குல மக்கள் யாருமே சொல்லவில்லை.

* குலப்பழியைச் சுமக்கலாமா?

தன்னுடைய அக்கிரமமான செயல்களுக்குத் தன் குலம் முழுவதும் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டவனாக இருந்தால், அழிவு வரும்போது துணைநிற்பவர்களும் சேர்ந்தழிவது தவிர்க்க முடியாததாக இருக்கும். ராவணன், தன் குலம் அழியத்தானே காரணமாக இருந்தான். முதல் நாள் போரில் ராமனிடம் தோல்வியடைந்த ராவணன், தன் அரண்மனையை அடைகின்றான். அருமையான பாட்டு.

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும் கையோடு இலங்கை புக்கான்

அவன் ஒரேயொரு விஷயத்தை மட்டும் தன்னோடு எடுத்துச் சென்றானாம். அது என்ன வென்று, தன்னுடைய குலத்துக்கு மீளாப்பழி.

தொடர்ந்து போம் பழியோடும் தூக்கிய கரங்க
ளோடும் நகர்ந்துபோய் நகரம் புக்கான்

– என்பது கம்பர் வாக்கு.

குலப்பழியைச் சுமந்தவன் ராவணனே தவிர வீடணனல்ல. எனவே, இக்குற்றச்சாட்டும் முறையானதல்ல.

* விபீஷணன், ராமனுக்கு ஆலோசனை சொன்னது சரியா?

தன்னிடம் விஸ்வாசத்தோடு சேர்ந்த விபீஷணனுக்கு, சில மதிப்புகளைத் தரக் கருதினான் ராமன். தொண்டனுக்கு ஆலோசனை தரும் வாய்ப்பினைத் தந்து, (அந்த ஆலோசனை தனக்கு ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும்) அதனைச் செயல்படுத்துவதன் மூலம், தொண்டனுக்கு உரிய இடத்தையும், பெருமையையும் தர வேண்டியது தலைவனின் கடமை. விபீஷணனுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை, விபீஷணனின் மூலம் பெற்று பயனடைந்ததாகக் கருதிக் கொள்வதன் மூலம், ராமனும் பெருமை பெறுகிறான். விபீஷணனும் பெருமை பெறுகிறான். அண்ணனுக்குத் துரோகம் செய்கிறோம் என்கிற குற்ற உணர்வு, விபீஷணனுக்கு இல்லை. அண்ணலாகிய ராமபிரானுக்கு உதவுகிறோம் என்கிற எண்ணம்தான் இருந்தது. அறம் ராமன்! அறத்திற்கு எதிரானவன் ராவணன்.

* விபீஷணன் எட்டப்பன் ஆகலாமா?

முதலில் எட்டப்பன் செயல் என்பதே சரியல்ல. விபீஷணன், யாரை நம்பவைத்து காட்டிக் கொடுத்தான்? ராவணனையா? ராவணன் விபீஷணனை நம்பினானா? ராமனிடம் சேரப்போகிறான் என்பதே அவனுக்குத் தெரிகிறதே. அதை ராவணன் சொல்லித்தானே விரட்டுகிறான்.

* ஆபத்தில் ராவணனை விட்டுப் பிரிந்தது சரியா?

ராவணனோடு இருக்க வேண்டும் என்றால், அவன் செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டும். அவன் மனம் ஏற்கும்படி அதாவது, அவன் தீமையை ஏற்கும்படி மட்டுமே பேச வேண்டும். அவன் கட்டளையை உயிர் கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டும். இதற்கு உட்பட்டவர்கள்தான் இலங்கையிலிருந்தார்கள். இதில் வேறு பட்ட இயல்பினனாக இருந்தவன் விபீஷணன். அவையிலே ஆலோசனை செய்யும்போது, ராவணனுக்கு மற்றவர்கள் பேசியது பிடித்தது. விபீஷணன் பேசியது பிடிக்கவில்லை. மற்றவர்கள், ராவணனின் மனமறிந்து பேசினர். விபீஷணன், ராவணனின் நலமறிந்து பேசினான். ராவணன், தனக்கு நன்மையைச் சொன்ன விபீஷணனை உதறித் தள்ளினான்.

“அரக்க குலத்தைக் கெடுக்க வந்த அயோக்கியனே! நீ என்னுடன் பிறந்த குற்றத்திற்காக உன்னை உயிருடன் விட்டே ன். ச்சீ! ஓடிப்போ!” (யுத்த-ஸர்.16-100-105). (நின்றால் உன்னைக் கொல்வேன் – குலத்துரோகி – போ என்று அறிவித்தவன் ராவணன்தான்) ராவணன்தான், விபீஷணனைப் பிரிந்தான். எனவே, இக்குற்றச்சாட்டும் பொருந்தாது.

* கும்பகர்ணனைப் போல விபீஷணன் உயிரை விட்டிருக்கலாமே?

மனநோய் கொண்ட ராவணனைக் காப்பாற்ற முயன்றவன் விபீஷணன். அவன் கொடுத்த மருந்தை ஏற்காமல் மாண்டவன் ராவணன். நோயாளியைக் காப்பாற்ற முடியாமல் அவன் உயிர்விடும்போது, அவனுக்கு மருத்துவம் சொன்ன மருத்துவரும் உடன் உயிர் துறக்காதது ஏன் என்று யாரும் கேட்பதில்லை.

* பகைவனான ராமனிடம் போய்ச் சேரலாமா?

முதலில் பகைவன் யார், நண்பன் யார் என்பதற்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். உன்னைக் கொல்வேன் என்று எந்தக் குற்றமும் செய்யாதபோது தண்டனை வழங்கி, நாட்டைவிட்டு ஓடிப்போ என்றவன் பகைவனா? நண்பர்கள் எதிர்த்தாலும் (மித்ர பாவேந) என்று அடைக்கலம் தந்து ஆதரித்தவன் பகைவனா? ராமனிடம் அவர் சேர வேண்டிய நியாயத்தை கதையின் துவக்கத்திலிருந்தே காட்டி வருகிறார்கள் காப்பிய ஆசிரியர்கள்.

ராவணனை, “அறிவாளி. வேதம் படித்தவன்; வீரன்” என்றெல்லாம் கம்பன் புகழவில்லை. ஆனால், விபீஷணனை “அழிவினை எய்துவான்; அறிவு நீங்கினான்.” “உத்தமன் அந்நகர் ஒழியப்போயினான்” – என்று கம்பன் புகழ்கிறார். கம்பன் விபீஷணனைப் பற்றிய எங்கு குறிப்பு கொடுத்தாலும், அவன் பெயரை ஓர் அடைமொழி இல்லாமல் அழைப்பதேயில்லை. பாத்திரங்களைக் கவிஞர்கள்தான் படைக்கிறார்கள். அந்த பாத்திரங்களின் குணங்களை அவர்களைவிட ஆழமாக அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

* நன்றி கொன்றுவிட்டானே விபீஷணன்?

ராவணன், மந்திரி சபையில் எப்படிப்பட்ட மந்திரிகள் இருந்தார்கள்? மஹா பார்ச்வன் என்றொரு மந்திரி. அவன் பேசுகிறான், “இவ்வளவு சிரமப்பட்டு சீதையை அபகரித்து வந்த நீங்கள், அவளை எப்படியாவது அனுபவிக்காமலிருப்பது அழகல்ல” (வான்மீகி. ஸர்க்கம் 13-10). “அதர்மம், தர்மம் எல்லாம் தங்களுக்கு இல்லை. நீங்கள் அதர்மத்தைப் பற்றி ஆலோசனையோ, கவலையோ படத்தேவையில்லை”. “சீதை தங்களுக்கு உடன்படாவிட்டால் பலாத்காரம் செய்யுங்கள்”.இத்தகைய சூழ்நிலையிலும் விபீஷணன் மிக உயர்ந்த வாக்கியங்களை ராவணனுக்குச் சொன்னான் என்று தொடங்குகிறார் வான்மீகி.

விபீஷனோ ராக்ஷஸராஜ முக்யம்
உவாச வாக்யம் ஹித மர்த் யுக்தம்
(ஸர் 14.1)

“அண்ணா! இவர்கள் பேசுவது சந்தோஷம் தரலாம். ராமனைப் பற்றி அறியாமல் பேசுகிறார்கள். இவர்கள் பேச்சு இவர்களுக்கோ, உனக்கோ உதவாது!”

இதற்குப் பிறகு ஓர் அருமையான உளவியலை நம் எல்லோருக்குமாக விபீஷணன் சொல்கிறான்.“அவையோர்களே! அமைச்சர்களே!

இப்போது தர்ம நீதி, வீரம் எல்லாம் ராவணனிடத்திலே இல்லை. அவன் காம எண்ணங்களோடு மட்டும் இருக்கிறான். இயல்பிலேயே கொடியவன். எனவே, தன்விருப்பம் போல காரியங்களைச் செய்கிறான். அவன் நிலை அறியாது நீங்கள் தூபம் போடுகிறீர்கள். பார்வைக்கு நீங்கள் உறவு போலத் தெரிந்தாலும், பகைவர்கள். காரணம், அவன் நன்மைக்குரிய எதையுமே நீங்கள் பேசவில்லை.

நீங்கள் இந்த ராவணன் போட்ட சோற்றை உண்பவர்கள். ஆனால், இவனை இப்போது நீங்கள் காப்பாற்ற மறுக்கிறீர்கள். இது நன்றி கொன்றதாகாதா? உண்மையிலேயே நீங்கள் இந்த அரசனான ராவணனுக்கு உறவு என்றால், தலைமயிரைப் பிடித்தாவது இழுத்து, அதர்ம காரியத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்க, நீங்களே அவனை அபாயத்தில் தள்ளுவது
சரியா?

ஒருவன், சேற்றிலே வழுக்குவதற்குத் தயார் நிலையில் உள்ளான். அவன் தம்பி, அவனை விழாதே என்று தடுக்கிறான். இல்லைவிடு என்று கையை உதறிக்கொண்டு அண்ணன் சேற்றிலே விழுகிறான்.இப்போது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, “சேற்றில் விழாமல் அண்ணனைக் காப்பாற்றத் தவறினான் தம்பி!” என்று சொன்னால் எப்படியிருக்கும்?

அதைவிட மோசம், ‘‘சேற்றில் விழுவதை தம்பியால் தடுக்க முடியாவிட்டால், இவனும் சேர்ந்து சேற்றில் விழுந்திருக்க வேண்டியதுதானே’’ என்று கேட்பது எப்படியிருக்கும்?

*சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லையே?

நடத்தையில் நின்றுயர் நாயகனான ராமபிரானால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் அவன். `செல்வ விபீஷணன்’ என்றே ஆழ்வார்கள் அழைக்கிறார்கள். சில நேரம் நற்செயல்கள் சாதாரண கண் கொண்டு ஆராயும் சமூகத்தால், புரிந்து கொள்ளப்படுவதில்லை. அப்படி புரிந்து கொள்ளப்படாததால், அவர்களைச் சமூகம் புறக்கணித்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது. காப்பிய ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள், சமய மேதைகள், ஆழ்வார்கள் போன்ற இறைஅருளை பெற்ற அருளாளர்கள், விபீஷணனைப் போற்றுகிறார்கள். அந்த அருளாளர்கள் ஏற்றுக் கொண்ட விபீஷணனை நாம் மறுக்கலாம். அதற்கான உரிமை நமக்கு உண்டு. நாம் மறுப்பதால் விபீஷணனுக்கு என்ன நஷ்டம்?

தொகுப்பு: பாரதிநாதன்

The post விபீஷணன் செய்தது சரியா? appeared first on Dinakaran.

Tags : Vibhishana ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?