×

மணிப்பூர் வீடியோ விவகாரம்; ஒன்றிய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

டெல்லி: மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன்? என போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மெய்டீஸ் சமூக ஆண்கள் கும்பல் ஒன்றால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று கடந்த 19ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியது.

அப்போது ஒன்றிய அரசின் தரப்பில், ‘மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும். அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மிகவும் தீவிரத்துடன் செயல்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மணிப்பூர் பெண்கள் தொடர்பான வழக்கை சிபிஐ தனியாக வழக்கு பதிந்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் கோரிக்கை மனு, மணிப்பூர் வைரல் வீடியோ விவகாரம், கலவரம் தொடர்பான இதர மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிப்பூரில் தற்போதும் அமைதி திரும்பாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிர்பயா வழக்கு போன்றதல்ல. மணிப்பூரில் வன்முறை கும்பலிடமே பெண்களை போலீசார் விட்டுச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன்? மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? வன்முறை நடந்து இத்தனை நாட்களாகியும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறை என்ன செய்தது? மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை 6,000 எப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சொலிசிட்டர் ஜெனரல் 6,000 எப்ஐஆர்கள் எந்தெந்த குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன? ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் கருத்தில் கொண்டு எங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது.

3 மாதங்கள் கடந்து விட்டது, பல்வேறு சாட்சியங்கள் அழிந்து போயிருக்கும்; யார் வாக்குமூலம் கொடுக்க முன்வருவார்கள்? என ஒன்றிய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்தால் நாங்கள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான பதில் வழங்க மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post மணிப்பூர் வீடியோ விவகாரம்; ஒன்றிய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Union ,State Govt. ,Delhi ,GI R.R. ,Supreme Court ,State Govt Supreme Court ,Chamari ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது