×

செங்கல்பட்டில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்கலன் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.210 கோடி முதலீட்டில், 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அமைத்துள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தினை திறந்து வைத்து, சிப்காட்- செய்யார் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடி முதலீட்டில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நிறுவியுள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்து, திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட்- செய்யார் தொழிற்பூங்காவில் உள்ள மஹிந்திரா SUV பரிசோதனைத் தளத்தில் 290 கோடி ரூபாய் முதலீட்டில் மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீட்டு திட்டங்களை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவும், மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் பலனாக, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4,10,561 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,73,448 கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டில் மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்தல் மற்றும் சிப்காட்- செய்யார் தொழிற்பூங்காவில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.

மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், மோட்டார் வாகன உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2012ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில், 125 ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புத் திட்டமான மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை நிறுவியது. இது உலக அளவில், மோட்டார் வாகனம் மற்றும் டிராக்டர் தயாரிப்புகளின் முதலாவது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.

இந்த மையம், சமீப காலங்களில், XUV 500, THAR, XUV300, KUV100, Alturas, TUV300 மற்றும் Arjun Novo, Yuvo and Jivo போன்ற பல புதிய வகை வாகனங்கள் மற்றும் டிராக்டர்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம், சிப்காட்-செய்யார் தொழிற் பூங்காவில் 454 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள சோதனைத் தடத்தில், வாகன சவாரி, கையாளுதல் மற்றும் பிற திறன் சரிபார்ப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், ஜூலை 4, 2022 அன்று, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, ஏப்ரல் 2022 முதல் 4 ஆண்டு காலத்திற்குள், கூடுதலாக 500 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளுவதாகவும், குறைந்தபட்சம் 850 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்திருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஹிந்திரா ஆராய்ச்சி மையம், சிப்காட்-செய்யார் தொழிற்பூங்காவில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஹிந்திரா SUV வாகனங்களுக்கான பரிசோதனைத் தளம் மற்றும் கோயம்புத்தூரில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப மையம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளது.

அதன்படி, முதலாவது திட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் 210 கோடி ரூபாய் மதிப்பீடில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஒரு வருடகாலத்திலேயே இதன் தொடக்க விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மஹிந்திரா நிறுவனம் சிப்காட் – செய்யார் தொழிற்பூங்காவில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மின்வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மையம் நிறுவும் திட்டத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அகில இந்திய அளவில், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இத்தகு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், இத்துறையில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. வே.விஷ்ணு, இ.ஆ.ப., மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் திரு. ஆர். வேலுசாமி, திருமதி அபாந்தி சங்கரநாராயணன், திரு. எஸ். சக்திவேலன் மற்றும் திரு.போய்ட்டா தனஞ்சயராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்கலன் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Mahindra ,Chengalpattu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...