×

22 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி

தினமும் ரூ.500 வருமானம் அசத்தும் அரசு ஊழியர்

ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் சிறப்பான முறையில் விவசாயம் செய்ய முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிய அளவிலான நிலத்தில் கூட நல்ல லாபம் கிடைக்கும் வகையில் விவசாயம் பார்க்கலாம். இந்த கருத்திற்கு சாட்சியாக திகழ்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு மத்தியாஸ் நகரை சேர்ந்த சேவியர் என்ற விவசாயி. 22 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி செய்து தினமும் வருமானம் பார்த்து வரும் சேவியரை சந்தித்தோம்…

‘‘குமரி மாவட்டம் மார்த்தாண்டம்தான் எங்க சொந்த ஊர். 9 வயது இருக்கும்போது எனது குடும்பத்தினர், துவரங்காடு மத்தியாஸ் நகருக்கு வந்தனர். எனக்கு பூதப்பாண்டி பேரூராட்சி ஊழியராக வேலை கிடைத்தது. தற்போது 60 வயது ஆகிறது. 41 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் நான் அடுத்த மாதத்தில் ஓய்வு பெறவிருக்கிறேன். பணியில் உள்ள நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய முடிவு செய்தேன். இதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இரு நபர்களிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயத்தைத் தொடங்கினேன். அதில் 22 சென்ட் நிலத்தில் சிவப்புக்கீரை சாகுபடியைத் தொடங்கினேன். மற்ற இடத்தில் வாழை சாகுபடி செய்து வருகிறேன்.

கீரை சாகுபடிக்கு முதலில் நிலத்தை பண்படுத்திவிட்டு, கீரை விதைக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அருகே பாத்தி பாத்தியாக தண்ணீர் தேங்கும் வகையில் நீள வாக்காக பள்ளம் எடுக்க வேண்டும். கீரை விதைக்கும்போது தினமும் தண்ணீர் விடவேண்டும். 5வது நாளில் விதையில் இருந்து கீரை முளைத்துவிடும். பின்னர் 10 நாட்கள் கடந்தவுடன், முளைத்த கீரைச்செடிகளை பிடுங்கி மற்ற இடத்தில் நட வேண்டும்.நட்ட பிறகு வாரத்திற்கு நான்கு நாட்கள் தண்ணீர் தெளிக்க வேண்டும். 25 நாட்களில் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். அதில் இருந்து தினமும் கீரைகளை அறுவடை செய்யும் வகையில் எனது வயல்களில் சாகுபடி செய்து வருகிறேன். கீரைகளுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறேன். அதற்காக மாட்டு சாணம், சாம்பல், கோழியின் எச்சம் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தயாரிக்கப்படும் உரத்தையும் வாங்கி பயன்படுத்தி வருகிறேன். தழைச்சத்திற்காக புளியமரத்து இலைகளை பயன்படுத்தி வருகிறேன்.

இயற்கை உரங்களை பயன்படுத்தி கீரைகளை சாகுபடி செய்து வருவதால், பூச்சிகளின் தாக்கம் குறைவாக
இருக்கும். அதனை மீறி கீரைகளை பூச்சிகள் தாக்கும்போது அதனைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதில்லை. எனது தோட்டத்தில் உள்ள காந்தாரி வகை மிளகாய் செடியில் இருந்து மிளகாயை பறித்து மிக்சியில் அரைத்து, அதனை நீரில் கலந்து கீரையின் மீது தெளிப்பேன். இந்த மருந்து தெளித்த 8 நாட்களுக்கு எந்த பூச்சி தொல்லையும் இருக்காது. 8 நாட்களுக்கு பிறகு பூச்சிகள் வந்தாலும், அதே முறையை பின்பற்றுவோம். இயற்கை உரங்களை பயன்படுத்துவதால், கீரைகள் குறைந்த உயரத்திற்கே வளரும். ஆனால் சுவை அதிகமாக இருக்கும். கீரை சாகுபடி செய்துள்ள தோட்டத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வேலை செய்துவிட்டு, பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வேன். பின்னர் மாலை 4 மணிக்கு தோட்டத்திற்கு வந்துவிடுவேன். இருள்சூழும் வரை வேலை செய்துவிட்டு வீட்டுக்கு செல்வேன். எனது மனைவி ஐடா ஜாய்பாய், எனது மகன் ஜெயா எபனேசர் ஆகியோர் விவசாய வேலைகளுக்கு உதவியாக இருந்து வருகின்றனர்.

தினமும் அறுவடை செய்யும் அளவிற்கு கீரைகள் கிடைத்து வருகிறது. அறுவடை செய்த கீரைகளை கட்டுகளாக கட்டி, துவரங்காட்டில் உள்ள 3 வியாபாரிகளுக்கு கொடுப்பேன். கீரைகள் அதிகமாக கிடைக்கும் நாட்களில் தினமும் ரூ.900 வரை வருமானமாக கிடைக்கும். குறைவாக அறுவடை செய்யும்போது ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும். தினமும் சராசரியாக ரூ.500 வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு கணக்கெடுத்தால் ரூ.15 ஆயிரம் வரை கீரைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த தொகையில் உரத்திற்கு மட்டும் ரூ.2500 செலவு செய்வேன். மீதியுள்ள ரூ.12,500 அப்படியே லாபம்தான்.

நான் சாகுபடி செய்யும் கீரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. துவரங்காடு ஜங்சனில் கொண்டு வைத்த 30 நிமிடத்தில் எல்லா கீரைகளும் விற்பனையாகிவிடும். மழைக்காலத்தில் மட்டும் விற்பனை குறைவாக இருக்கும். இருந்தாலும் 2 மணி நேரத்தில் அனைத்து கீரைகளும் விற்பனையாகி விடும். அதிக முதலீடு இல்லாமல் கீரை சாகுபடி செய்வதால், தினமும் நமது கைச்செலவு, குடும்ப செலவிற்கு என காசு வந்துகொண்டே இருக்கும். தினமும் காசு வருவதால், இந்த கீரை சாகுபடி தொழிலை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறேன் என்றார்.

தொடர்புக்கு:
சேவியர்: 97896 37500

ரூ.3500க்கு கீரை விதை விற்பனை

கீரை விற்பனை ஒருபக்கம் இருந்தாலும், கீரை விதை விற்பனை மூலம் கூடுதல் வருமானம் பார்க்கிறார் சேவியர்.‘’ கீரை விதைக்கு என்று தனியாக கீரைகள் சாகுபடி செய்வது இல்லை. நாம் விதைக்கும் போது, விதைக்கும் இடத்தை தவிர வேறு சில இடங்களில் விதைகள் சிதறி விழும். சிதறி விழும் இடத்தில் இருந்து ஒரு சில கீரைகள் முளைக்கும். அதனை விதைக்காக விட்டுவிடுவேன். தனியாக சிதறி விழும் கீரையில் இருந்து கிடைக்கும் விதைகள் வீரியமாக இருக்கும். அதனை பக்குவப்படுத்தி வைத்துக்கொள்வேன். கீரை விதை கேட்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை ரூ.3500க்கு விற்பனை செய்து வருகிறேன். பிற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் போன் செய்து கீரை விதைகளை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு 100 கிராம் கீரை விதை ரூ.360க்கு விற்பனை செய்து வருகிறேன். அவர்களது முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பி வைப்பேன். கொரியர் கட்டணத்துடன், விதைக்குண்டான பணத்தை விவசாயிகள் தருகின்றனர். இதிலும் தனியாக வருமானம் கிடைக்கிறது’’ என்கிறார் குஷியாக.

கோடையில் குளத்துநீர் பாசனம்

கீரை பயிருக்கு தண்ணீர் முக்கியம். வெயிலின்போது தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். இதனால் மாலைப்பொழுதில் கீரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வாரத்திற்கு 4 நாட்கள் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. சேவியரின் வயல் அருகில் ஆறு ஓடுவதால், அதில் இருந்து தண்ணீர் எளிதாக கிடைத்துவிடுகிறது. 9 மாத காலம் ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. கோடை காலத்தில் அதாவது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆற்றில் தண்ணீர் இருக்காது. இந்த சமயத்தில் வயல் அருகே உள்ள ஒரு சிறிய குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கீரைக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

The post 22 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Cent ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு...