×

தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலயம் குளத்தில் மீண்டும் படகு சவாரி: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் பழுதாகி உள்ள படகை சீரமைத்து கமலாலயக் குளத்தில் மீண்டும் படகு சவாரியை துவக்கிட வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்துவருகிறது.

கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் இந்த கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்தானது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது துவங்கப்பட்டது. இதையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும் என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொது மக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்த படகின் இன்ஜினில் ஏற்ப்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த 5 ஆண்டிற்கும் மேலாக இந்த படகு சவாரி என்பது இல்லாமல் இருந்து வருகிறது.இதேபோல் பெடலிங் படகு என்பதும் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளதன் காரணமாக இந்த குளத்தில் படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உடனடியாக இந்த குளத்தில் படகு சவாரியினை துவங்கிட வேண்டும் என பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்ஜின் மற்றும் படகு பழுது காரணமாக படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படகு சவாரிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலயம் குளத்தில் மீண்டும் படகு சவாரி: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiagarajar Swamy Temple ,Kamalalayam Pond ,Tiruvarur ,Thiruvarur ,Thiagarajar ,Swamy Temple ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...