×

பருவமழை குறைந்ததால் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிக்க கவியருவியில் குவியும் பயணிகள்: ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைவால், ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர், ஒரே நாளில் 2ஆயிரம் பேர் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திருந்து மழையின்றி வெயின் தாக்கம் அதிகமானதால், ஆழியார் அருகே உள்ள கவியருவில் தண்ணீர் வரத்தின்றி இருந்தது.

இதனால், அன்று முதல் சுமார் 5 மாதத்திற்கு மேலாக கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழை சிலநாட்கள் பெய்தது. அதன்பின் தென்மேற்கு பருவமழையால் கவியருவிக்கு தண்ணீர் வரத்து துவங்கியது. இதையடுத்து கடந்த 12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த வாரத்தில், பருவமழை வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் சிற்றருவிகளில், மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் பல நாட்களாக குளிக்க தடையால் ஆழியார் அறிவுத்திருக்கோவில் அருகே உள்ள சோதனை சாவடியிலிருந்து, சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இருப்பினும், தடையை மீறி யாரேனும் குளிக்க செல்கின்றார்களா? என கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்து கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது. இதனால், கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் நேற்று ஞாயிறு விடுமுறை நாளையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கவியருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பகுதி பகுதியாக வெகுநேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர். கவியருவியருகே குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரிலும் குளித்து மகிழந்தனர். வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்கள், நவமலை செல்லும் வழியில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், வால்பாறை ரோட்டில் எந்தவித இடையூறு இல்லாமல் இருந்தது. அண்மையில் பெய்த பருவமழையால், கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டியதையடுத்து, விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், வனத்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்து கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது. இதனால், கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் நேற்று ஞாயிறு விடுமுறை நாளையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கவியருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

The post பருவமழை குறைந்ததால் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிக்க கவியருவியில் குவியும் பயணிகள்: ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் வருகை appeared first on Dinakaran.

Tags : Kaviaruvi ,Pollachi ,Western Ghats ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...