×

வாட்டி வதைக்கும் வெயில், பருவமழை தாமதத்தால் வேகமாக சரியும் ஆத்தூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நிலக்கோட்டை: கடுமையான வெயில் மற்றும் பருவமழை தாமதம் காரணமாக திண்டுக்கல் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க அணை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். இருநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட அணை சுமார் 24 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை திண்டுக்கல் மாநகராட்சியின் 80 சதவீத நீர் தேவையை பூர்த்தி செய்து வருவது மட்டுமல்லாமல் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1000க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் பருவமழை தாமதம் காரணமாக நீர் வரத்து குறைந்து, நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதனால் வேகமாக வளர்ந்து வரும் திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி சமூக ஆர்வலரும் விவசாயியுமான கண்ணன் கூறுகையில்:
பிரசித்தி பெற்ற ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கையோடு ஒன்றி அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வற்றாமல் காட்சியளித்த நீர்நிலை தற்பொழுது கடந்த சில தினங்களாக வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்மட்டம் விறுவிறுவென குறைந்து வருகிறது. மேலும் ஆடிப்பட்டம் தேடி விதைக்கணும் என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதம் துவங்க வேண்டிய பருவமழை சரியான நேரத்தில் துவங்காமல் தாமதமாகி மே மாத வெயில் தொடர்ந்து வாட்டி வதைக்கிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் 15 அடியாக குறைந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இவ்வணை அமைந்துள்ளதால் இயற்கையான சீதோசண நிலை மற்றும் பசுமையுடன் கூடிய நீர் தேக்கத்தை ரசிக்க சமீப காலமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இதனால் அணைக்கு வரும் சாலை மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கான நிழல்கூரை, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். எப்போதும் வற்றாமல் காட்சி அளிக்கும் இயற்கையோடு ஒன்றிய அமைந்துள்ள இவ்வணையை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீர் பிடிப்பு பகுதிகளில் மழைகுறைவு மற்றும் கடுமையான வெயில் காரணமாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தாலும் நீரின் தேவை அதிகரிப்பும் அணை நீர்மட்ட குறைவுக்கு காரணம்.

இது குறித்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் காமராஜர் அணையின் நீர் பயன்பாடு முக்கியத்துவம் உணர்ந்து வறட்சி காலத்தில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post வாட்டி வதைக்கும் வெயில், பருவமழை தாமதத்தால் வேகமாக சரியும் ஆத்தூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Aathur dam ,Nilakottai ,Athur Kamaraj Reservoir ,Dindigul city ,Athur ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்