×

கோதையாறு மோதிரமலையில் ரப்பர் பால் வெட்ட சென்ற தொழிலாளியை தாக்கிய புலி: வனத்துறையினர் தீவிர விசாரணை

 

குலசேகரம், ஜூலை 31: கோதையாறு மோதிரமலையில் நேற்று காலை பால்வெட்ட சென்ற தொழிலாளியை புலி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த சிற்றாறு அரசு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியான சிலோன் காலனியில் கடந்த 3ம் தேதி புலி ஒன்று நடமாடுவது தெரியவந்தது.இதையடுத்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் வளர்த்து வந்த சில நாய்களும் மாயமாயின. தொடர்ந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் புலி தாக்கி கொன்று தின்று வந்தது. இதனால் அந்த பகுதியில் புலி குறித்த பீதி நிலவி வருகிறது.

இதையடுத்து புலியை பிடிக்க குமரி மாவட்ட வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி புலி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகள், கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தீவிரமாக கண்காணித்தனர். இருப்பினும் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க, ‘எலைட்’ எனும் வெளிமாவட்ட சிறப்பு படையினரும் சத்தியமங்கலத்தில் இருந்து வந்து முயற்சி செய்தனர். ஆனாலும் எந்தவித பயனும் இல்லை.

இதையடுத்து ‘எலைட்’ குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார். வனச்சரகர் முகைதீன், கடையாலுமூடு பேரூராட்சி தலைவர் ஜூலியட், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி இருந்த கூட்டத்தில், ‘எலைட் குழுவினர் சில தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக வேறு இடத்திற்கு செல்கின்றனர்.

ஆனால் புலியை கண்காணிக்கும் பணி வழக்கம்போல் களியல் வனத்துறையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டு விலங்குகளை அவிழ்த்து விடக்கூடாது. இரவு நேரங்களில் வெளி நடமாட்டங்களை மக்கள் குறைத்து கொள்ள வேண்டும்’ என்றும் வனத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி இருக்க கடந்த சில நாளாக வளர்ப்பு பிராணிகளை புலி தாக்கும் சம்பவங்கள் நடக்கவில்லை. இதனால் அங்கிருந்து வேறு பகுதிக்கு புலி இடம் பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.45 மணியளவில் கோதையாறு அருகே மோதிரமலையில் சிவகுமார் என்பவர் தனக்கு சொந்தமான ரப்பர் மரங்களில் பால் வடிக்க சென்றிருந்தார். அப்போது அங்கு உயரமான பாறை ஒன்றின் மீது அமர்ந்து இருந்த புலி திடீரென சிவகுமார் மீது பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புலியுடன் பால்வெட்டும் கத்தியை வைத்து போராடியுள்ளார். சிவகுமாரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். இதைக்கண்ட புலி அங்கிருந்து தப்பி ஓடியது. புலி தாக்கியதில் சிவகுமாருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனே அந்த பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோதையாறு மோதிரமலையில் ரப்பர் பால் வெட்ட சென்ற தொழிலாளியை தாக்கிய புலி: வனத்துறையினர் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiger ,Gothayaru Ring Malayas ,Kulasekaram ,Gothayyarai Ring Malay ,Gothai Ring Valley ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...