×

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பட்டம், டிப்ளமோ படிக்க விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

 

சென்னை, ஜூலை 31: தாட்கோ மூலமாக 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்கள், ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் மூன்று வருட முழு நேர பட்ட படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்ட அறிவிப்பு: சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அப்ளைட் நியூட்ரிசியன் நிறுவனமானது ஐஎஸ்ஓ 9001 2021 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும்.

இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்க வணிக கவுன்சில் ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. சிஇஓ வேர்ல்ட் மெகசின் நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற இந்நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பிஎஸ்சி (ஆஸ்பிட்டாலிட்டி அன்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்) 3 வருட முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் படிப்பு), உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு,), ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பட்டம், டிப்ளமோ படிக்க விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adiravidar ,Chennai ,Aditravidar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...