×

முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்திப்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: தலைமை ஆசிரியர் வழங்கினார்

 

கும்மிடிப்பூண்டி, ஜூலை 31: கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அரசுமேல்பள்ளி முன்னாள் மாணவர்கள் சத்திப்பில், 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை தலைமை ஆசிரியர் வழங்கினர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆத்துப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, ஏனாதிமேல்பக்கம், அயநல்லூர், ரெட்டம்பேடு, நத்தம், குருவாட்டுச்சேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, சின்னமாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் காலம் காலமாக மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து, அந்தப் பள்ளிக்கு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் உதவிகளை வழங்க வேண்டுமென அரசு பள்ளிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, மாதர்பாக்கம், ஆத்துப்பாக்கம், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான மேசை, வர்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் அமைத்தல் குறித்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 -1987ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு சந்திக்கும் நிகழ்வு நேற்று காலை நடந்தது. தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாணவர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சரிதா ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நல்லாசிரியர் விருது பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் நாகராஜன் அவர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நாகராஜ் பேசுகையில், தான் பெற்ற ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியதாக கூறினார். மேலும், கே.எல்.கே. அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த சக்திவேல், கிஷோர், ஜெயின் ஆகிய மாணவர்களுக்கும் காயத்ரி, தமிழ்ச்செல்வி, திவ்யா, திரிஷா ஆகிய நான்கு மாணவிகளுக்கும் ஊக்கத்தொகையுடன் நினைவு பரிசுகளை தலைமை ஆசிரியர் நட்ராஜ் வழங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் குழு தலைவர் ரகு, செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பத்மநாபன் மற்றும் முனிராஜ் உள்ளிட்ட நண்பர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

The post முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்திப்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: தலைமை ஆசிரியர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Govt. High School ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...