×

பாத யாத்திரைக்கு பிறகு தாமரை தலைவருக்கு கல்தா கொடுக்க உள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒன்றிய உள்துறையின் பவர்புல் மேன் வாழ்த்த மட்டும் வரல, கட்சி பதவியில் இருந்து விடை கொடுக்கவும் வந்ததாக தாமரை வட்டாரத்துல ஓடுற ‘டாக்’ உண்மை தானா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தாமரை தலைவர் ‘மவுன்டன்’ மாநில அளவிலான யாத்திரையை ெதாடங்கி உள்ளார். இவர் தலைவர் பதவிக்கு வந்தவுடன், கட்சியின் மாஜி முன்னணிகள், ஆளுமைகளை அடியோடு ஓரங்கட்டி அவங்க, அவங்க வீட்டு சேரில் ஹாயாக உட்காருங்க என்று சொல்லாமல் செயலில் காட்டினார்.

இதனால், சேரில் ஹாயாக உட்கார்ந்து இருந்தவர்களை தேடி டெல்லியில் உள்ள ஆட்கள் தொடர்பு கொண்டபோது கட்சியில் தங்களின் இன்றைய நிலையை எடுத்து சொன்னாங்களாம். அதை கேட்ட டெல்லி மேலிடம் இவ்வளவு நடந்திருக்கா… தமிழ்நாட்டுல சீனியர்ஸ் இல்லாம இவங்களை மட்டும் வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் கட்சியின் நிலை என்ன ஆகும் என்பதை எல்லாம் டெல்லி தலைவர்கள் யோசித்தார்களாம். ெடல்லி மேலிடத்துக்கு பாஸ் செய்ய ேவண்டிய தகவல்களை புள்ளிவிவரத்துடன் பாஸ் செய்துவிட்டு, மாஜிக்கள் அமைதியாக தற்போது வேடிக்கை பார்த்து வருகிறார்களாம்.

மவுன்டனின் யாத்திரை சென்னையைச் சென்று சேரும்போது, அவரது பதவி அவரிடம் இருக்காது என்று அடித்து சொல்கிறார்களாம் தாமரையில் உள்ள தலைகள். இதேபோல் தான், இமாச்சல பிரதேசத்தில் மாநிலத் தலைவர் யாத்திரை நடத்தினார். அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டதாம். ஆந்திராவில், தாமரைக்கட்சிக்கு, மிகவும் வலிமை வாய்ந்த மாநில தலைவராக இருந்தவரும், இதுபோல, யாத்திரையை நடத்தினார். யாத்திரை முடிந்ததும் அவரிடம் இருந்த மாநிலத் தலைவர் பதவி காலியாம். இந்த யாத்திரை துவங்கிய நாளிலேயே முதல் விக்கெட் விழுந்து விட்டது. தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளராக இருப்பவரின் தேசியப் பதவி பிடுங்கப்பட்டு விட்டது. இவர் மவுன்டனுக்கு மிக நெருக்கமானவர். இது ஆரம்பம் தானாம்.

இனிமேல் தாமரையில் இருந்து இதழ்கள் ஒவ்வொன்றாக உதிரும் பாருங்கள். புதிய தாமரை தலைவரை மக்களை கவரும் முகத்தை டெல்லி பார்த்து வைத்துவிட்டதாக ‘மவுன்டனின்’ எதிர் முகாமில் இருந்து தகவல்கள் வந்து கொண்டே இருக்காம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, யாத்திரை முடியும் போது, ‘மவுன்டன்’ பதவிக்கு ஆப்பு உறுதி…’’ என்று அடித்து சொல்கிறார்கள். ‘‘யாத்திரை பயணத்துடன் மவுன்டன் பதவி காலியானால்தான், இலைக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவரை வைத்துக்கொண்டு, நாங்கள் எதிர்பார்க்கும் சீட்டுகளை கேட்டு பெற முடியாது’’ என மேலிடத்திலும் கறாராக சொல்லிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர்ல நடக்கும் அரசியல் கூத்தை சொல்லேன் கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர்ல வர்ற எலக்‌ஷன்ல தாமரை கூட்டணியில 3 எழுத்து பெயர் கொண்டவரு போட்டியிட போறாராம். இதற்காக தீவிரமாக காய் நகர்த்த தொடங்கி இருக்காராம். காரணம் இந்த முறை கண்டிப்பாக ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கை கூட்டல் கழித்தலுக்கு பிறகு அவருக்கு யாரோ சொன்னாங்களாம். இதனால, வெயிலூரை மீண்டும் குறி வைத்துள்ளாராம் மூன்றெழுத்துகாரர். இது ஒருபுறம் இருக்க தாமரையில சிலரும் நாங்கள் போட்டியிட போகிறோம்னு சொல்லிகிட்டு திரியறாங்களாம். இதுல குறிப்பாக அந்த கட்சியில ஸ்டேட் லெவல்ல பொறுப்பு வகிக்குறவங்களும், மாஜி மேயரும் போட்டி போட தீவிரம் காட்டி வருவதாக பரபரப்பாக பேச்சு அடிபட்டது.

ஆனால் இப்ப அவர் பின்வாங்குறாராம். தேர்தல்ல செலவு செய்ற அளவுக்கு எங்கிட்ட இல்ல. நான் எலக்‌ஷன்ல எல்லாம் நிற்க மாட்டேன்னு கட்சி தலைமைக்கு சொல்லிட்டதாக அந்த கட்சியிலயே பேசிக்கிறாங்க. கட்சியிலயும் பலமான ஆள் இல்லையாம். இதனால, பலத்தை காட்ட கூட்டணிக்கு தொகுதியை கொடுத்து ஜெயிக்கலாம்னு கட்சிக்காரங்களே தலைமைக்கு சொல்லியிருக்காங்களாம். தலைமையும் கூட்டணி கட்சியை சேர்ந்த 3 எழுத்து காரருக்கே வெயிலூர் தொகுதியை கொடுக்க விருப்பம் தெரிச்சுட்டாங்களாம். ரூட் கிளியர் ஆனதாக நினைத்த நேரத்துல இலைகட்சியை சேர்ந்த 2 பேர் இலைக்குத்தான் வெயிலூர் தொகுதியை ஒதுக்கணும்னு போட்டி போடுறாங்களாம்.

அதனால தாமரை கட்சியில் உள்ளவர் தனக்கு போட்டியாக யாரும் வரக் கூடாது என்று நினைக்கிறாராம். அதனால, தேர்தலில் நிற்போம்னு அடம் பிடிப்பவரை பிடித்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் ஆசையை கைவிட செய்யலாம்ன முடிவு எடுத்து இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எக்ஸ்பைரி வாகனத்தில் யாத்திரை போவது பற்றி யார் பேசினாங்க…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘தாமரை தலைவர் மவுன்டன் யாத்திரை செல்ல கன்னியாகுமரியில் உள்ள தாமரை கட்சியை சேர்ந்த சிலர் கார் ஒன்றை தயார் செய்தாங்களாம். 2006ம் ஆண்டு மாடல் கார் அது. 16 ஆண்டுகள், 8 மாதங்கள் ஓடிய அந்த வாகனத்தைதான் பளபளவென்று கட்சி சின்னம், வண்ணம் அடங்கிய காகிதத்தை ஒட்டி அழகுபடுத்தினாங்களாம்.

நம்ம ஆட்களை பற்றி தான் தெரியுமே, மவுன்டன் பயணித்த வாகனம் எந்த மாடல், வாகனத்தின் பெயர், உருவான ஆண்டு, எப்சி செய்யப்பட்ட ஆண்டு என்று எல்லாவற்றையும் தோண்டி எடுத்தாங்களாம். அதில் தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாம். அந்த வாகன எண்ணை பரிசோதித்தவர்கள் அதன் ‘பிட்னஸ் எக்ஸ்பயர்டு’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வாகன புகைப்படத்துடன் பரப்பினர். 2021ம் ஆண்டுடன் அதன் பிட்னஸ் காலாவதி ஆகிவிட்டதாம். ஆனால் எதனை பற்றியும் கவலைப்படாமல் அந்த வாகனத்தையே மவுன்ட் யாத்திரை பற்றிய பிரசாரத்திற்காக அனுப்பி வைத்து விட்டார்கள்…’’ என்றார் விக்கியானந்தா

The post பாத யாத்திரைக்கு பிறகு தாமரை தலைவருக்கு கல்தா கொடுக்க உள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Kalta ,Varatula ,Union ,Valla ,Yananda ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...