×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திருச்சி, தென்சென்னை எம்பி தொகுதிக்கு குறிவைக்கும் குஷ்பு: சீட் கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம்

திருச்சி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திருச்சி, தென்சென்னை எம்பி தொகுதியை குறிவைத்து சீட் கேட்டு மேலிடத்துக்கு குஷ்பு அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ரகசியமாக தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. அதிமுக ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. மற்ற 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த முறையும் அதிமுக-பாஜ கூட்டணி தொடர்கிறது. ஆனால் இம்முறை 50/50 என்ற பார்முலாவில் தொகுதி பங்கீட்டை பாஜ நடத்தி வருகிறது. இதற்கு அதிமுக இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் வேலூர், தென்சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருச்சி, உள்ளிட்ட 10 தொகுதிகளை குறிவைத்து பாஜ தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.

நீலகிரியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக நீலகிரிக்கு தொடர்ந்து விசிட் அடித்து வருகிறார் எல்.முருகன். வேலூர் தொகுதியை கேட்டு ஏ.சி.சண்முகம் காய் நகர்த்தி வருகிறார். இதேபோல் குமரியில் பொன்.ராதாகிருஷ்ண்ணன் என ஒவ்வொரு தொகுதியை குறிவைத்து மேலிடத்திடம் பேச்சு நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி தொகுதிக்கு நடிகை குஷ்பு காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக குஷ்பு இருந்த போது, திருச்சி மண்டையூர் அருகே அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினர். தமிழகத்தில் வேறு எந்த நடிகைக்கும் கோயில் கட்டியது இல்லை. நடிகைக்கு கோயில் கட்டியது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திருச்சி தொகுதி சாதகமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ரங்கம் ரங்கநாதர் கோயில் வருவதால் பிரமாணர்கள் ஓட்டுக்களை குறிவைத்து குஷ்பு கேட்பதாக பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகிறது. திருச்சி தொகுதி கிடைக்காத பட்சத்தில் தென்சென்னையை கேட்டு அழுத்தம் கொடுக்க திட்டுமிட்டுள்ளார்.

இதுபற்றி குஷ்பு வட்டாரத்தில் விசாரித்த போது, ‘கூட்டணி உறுதியாகி இன்னும் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையே துவங்கவில்லை. அதற்குள் இந்த பேச்சு தேவையில்லை. திருச்சியில் குஷ்பு போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தி தான். எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும். மேலிடம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை குஷ்பு நிறைவேற்றுவார்’ என்றனர். பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திருச்சி, தென்சென்னை எம்பி தொகுதிக்கு குறிவைக்கும் குஷ்பு: சீட் கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் appeared first on Dinakaran.

Tags : Khushpu ,Trichy ,South ,Chennai ,Kushbu ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...