×

கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியான பட்டாசு குடோன் விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியான பட்டாசு குடோன் விபத்திற்கு, சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். கிருஷ்ணகிரி பழையபேட்டையில், நேற்று முன்தினம் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் 9 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக உணவு துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டர் சரயு, செல்லகுமார் எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில், பட்டாசு விற்பனை கடையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரச்செய்தியை அறிந்த தமிழக முதல்வர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த ஆணையிட்டார். அதனடிப்படையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியில் தங்கி காயமடைந்தவர்களை பார்வையிட்டும், வெடிவிபத்தில் இறந்தவர்களின் 9 குடும்பத்திருக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கான காசோலைகள், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.

படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.11 லட்சத்திற்கான காசோலைகளையும், லேசான காயமடைந்த 2 பேருக்கு, தலா ரூ.50 ஆயிரம் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.
அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த காரணங்களை ஆய்வு செய்த தர்மபுரி தடயவியல் நிபுணர்கள், காஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வழங்கி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் குறித்தும், விற்பனை செய்யப்படும் இடம், அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பட்டாசு கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை வழங்கப்படும். இனிவரும் காலத்தில் பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கலெக்டர், எஸ்பிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியான பட்டாசு குடோன் விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம்: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Firecracker godown ,Krishnagiri ,Minister ,Chakrapani ,Dinakaran ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு