×

ஐஎல் அண்ட் எப்எஸ் பண பரிவர்த்தனை மோசடி மக்களின் வரிப்பணத்தை அபகரிக்க திட்டமிட்டு சதி செய்த சிவசங்கரன்: வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஐஎல் அண்ட் எப்எஸ் பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் இருந்து சிவசங்கரனை விடுவிக்க மறுப்புத் தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், மக்கள் வரிப்பணத்தை அபகரிக்க சிவசங்கரன் திட்டமிட்டு கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய மோசடிச் செயலுக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், அதன் நிறுவனருமான சிவசங்கரன், பல்வேறு நிதி மோசடிகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இவரது தில்லு முல்லுகள் தொடர்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஐஎல் அண்ட் எப்எஸ் என்ற கட்டுமான வளர்ச்சி நிறுவனத்தின் நிதி மோசடிகளிலும் இவருக்கு உள்ள தொடர்பு வெளியானது.

இந்த மோசடி தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம், சிவா குரூப்பின் பல்வேறு நிறுவனங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ரூ.494 கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்கு அடமானமாக, சிவா குரூப் நிறுவனம் ரூ.7.85 கோடி மதிப்பிலான பட்டியலிடப்படாத டாடா டெலி சர்வீசஸ் லிமிடெட் பங்குகளை வைத்துள்ளது. இந்நிலையில், ஐபின் நிறுவனம் ரூ.254 கோடி மதிப்பிலான அனைத்து பங்குகளையும் பெற்றுக் கொண்டு, சிவா குழுமத்தின் நிலுவைக் கடன் தொகையை சரி செய்துள்ளது.

அதன்பிறகு சிவா கிரீன் பவர் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.190 கோடியும், சிவா ஷெல்டர் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு ரூ.50 கோடியும் வழங்கியுள்ளது. ஆனால் இந்த கடன் தொகை, வாங்கிய நோக்கத்துக்காக இல்லாமல் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடன் தொகையும் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஐபின் நிதி நிறுவனம், தனது குழுமத்தில் உள்ள மற்றொரு கம்பெனிக்கு கடன் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஐபின் நிதி நிறுவனம் தனது குழுமத்தைச் சேர்ந்த ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு பிற நிறுவனங்கள் மூலமாக ரூ.2,270 கோடி கடனை எந்த அடமானமும் இல்லாமல் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கமிஷன் அடிப்படையில் பிற நிறுவனங்கள் இந்த கடன் தொகையை ஐடிஎன்எல் நிறுவனத்துக்கு மாற்றியுள்ளன. ஐபின் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களின் நிதி மோசடிகளில் அதன் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ரவி பார்த்தசாரதி, ஹரி சங்கரன், விபாவ் கபூர் மற்றும் அருண் சாகா, ராம்சந்த் ஆகியோருடன் தொழிலதிபர் சிவசங்கரன் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். ஐஎல் அண்ட் எப்எஸ் அதிகாரிகள் தங்கள் நிறுவன ஊழியர்களின் நலநிதியையும், தங்களின் சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியுள்ளதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களின் பங்குகள் அதன் ஊழியர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிறகு அதே பங்குகளை எல்ஐசி நிறுவனத்துக்கு மிக கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு அவர்கள் பங்குகளை வாங்கிய தொகைக்கான பணம் கொடுக்கப்பட்டு, கூடுதலாக விற்கப்பட்ட பணத்தை ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன நிர்வாகிகளே சுருட்டியுள்ளனர். இந்த மோசடிகள் தொடர்பாக ஐபின் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிர்வாகிகள் ரவி பார்த்தசாரதி, ரமேஷ் பாவா, அருண் சாகா, ஹரி சங்கரன், ராம்சந்த், ஐஎல் அண்ட் எப்எஸ் நிதி சேவை நிறுவனம் மற்றும் தொழிலதிபர் சிவசங்கரன் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கரன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் , ‘‘இந்த வழக்கில் தன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, எந்த வித ஆதாரமும் இல்லை. பணமோசடியால் பலன் அடையவில்லை.குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிகள் 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடந்துள்ளது. ஆனால், 2007ம் ஆண்டிலேயே சிவா நிறுவனங்களை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறி விட்டேன். சிவா குழுமத்தில் இருந்து வெளியேறியபோது, அதற்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் மட்டுமே செயல்பட்டேன்’’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் சுனில் கோன்சால்வ்ஸ், ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே, தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் நடத்திய விசாரணையில், ஐபின் இயக்குநர்கள் குழு, சிவா குழுமத்தின் புரமோட்டருடன் கூட்டுச் சேர்ந்து, அதன் பல நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியது. இந்தக் குழு நிதி நெருக்கடியில் இருந்தபோதும், நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலும் இருந்தபோதும் மேற்கண்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட குழு முன்பு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகவே, புதிய கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது கடன் ஒப்புதல் குறிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, சிவா குழுமம் நிலுவையில் வைத்துள்ள ரூ.494 கோடி கடன் தொகையானது , மேற்கண்ட குற்றத்தின் மூலம் பெறப்பட்டது முந்தைய கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும் கடன்தொகையில் பெருமளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் வரிப்பணத்தை அபகரிக்க சிவசங்கரன் திட்டமிட்டு கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய மோசடிச் செயலுக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

ரூ. 91,000 கோடி கடன் நெருக்கடி

ஐஎல் அண்ட் எப்எஸ் என்ற கட்டுமான வளர்ச்சி நிதி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், வங்கிகள் மற்றம் இதர நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. இந்த நிறுவனம் ரூ.91 ஆயிரம் கோடி கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் இதன் நிர்வாகிகள் மற்றும் ஆடிட்டர்கள் தான் என தீவிர மோசடி வழக்குகளை விசாரிக்கும் ஒன்றிய அரசு நிறுவனமான எஸ்எப்ஐஓ கூறியுள்ளது.

* செல்வாக்கை பயன்படுத்தி மோசடி செய்த சிவசங்கரன்
ஐபின் நிதி நிறுவனத்தின் நிர்வாகி ரவி பார்த்தசாரதியுடன், தொழிலதிபர் சிவசங்கரன் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ‘யுனிடெக் குரூப்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.125 கோடி கடனை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிறுவனம் சிவசங்கரன் நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியிருந்தது. ஐபின் நிதி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரூ.125 கோடி கடன் தொகையில் இருந்து ரூ.80 கோடியை எடுத்து, சிவசங்கரனின் நிறுவனத்துக்கு கொடுத்து கடனை அடைத்ததாக அந்த நிறுவனம் கணக்கு காட்டியது.

சிவசங்கரன் இந்த தொகையை எடுத்து, ஐபின் நிறுவனத்திடம் தனது நிறுவனம் வாங்கிய கடன்களில் சிலவற்றை அடைத்தார். இந்த மோசடி தொடர்பாக எஸ்எப்ஐஓ மும்பை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* மோசடி செய்வது கைவந்த கலை
வங்கிகளிடம் தனது நிறுவனத்துக்காக சிவசங்கரன் கடன் வாங்கி மோசடி செய்த தொகை கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக, வங்கிகள் தாங்கள் வழங்கிய கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், மீண்டும் அந்த நபருக்கு அல்லது நிறுவனத்துக்கு கடன் வழங்குவது கிடையாது. ஆனால், சிவசங்கரன் விஷயத்தில் அப்படியல்ல. ஏமாற்றிய பிறகும் அதே வங்கியே இவருக்கு கடன் தந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம், வங்கிகளில் வாங்கிய ரூ.4,863 கோடியை வெறும் ரூ.323 கோடி கொடுத்து சிவசங்கரன் நிறுவனம் மோசடி செய்ததும், இதன்மூலம் அவர் ரூ.4,500 கோடி மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்டதும் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்போது விசாரணை நடத்திய கம்பெனிகள் தீர்ப்பாயம், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிறுவனம், செட்டில்மென்ட் தொகையை திருப்பிச் செலுத்தும் என்றநம்பிகையும் உறுதியும் எவ்வாறு ஏற்பட்டது? சொற்ப தொகைக்கு மிகப்பெரிய கடன் தொகை நேர் செய்யப்பட்டது மோசமான முன்னுதாரணம் ஆகாதா என சராமாரி கேள்வி எழுப்பியது. இதுபோல் இங்கிலாந்தின் வெர்ஜின் தீவில் இருந்து செயல்பட்டு வரும் ஆக்சில் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் வின் அண்ட் ஒய் என்ற நிறுவனங்களை சிவசங்கரன் நடத்தி வந்தார். நிறுவனங்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபரில், சென்னை ஐடிபிஐ வங்கி ரூ.322.40 கோடி கடன் வழங்கியது.

பின்னர், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டதால் இது திவாலானதாக பின்லாந்து நீதிமன்றம் கடந்த 2013ம் ஆணடு அக்டோபரில் அறிவித்தது. இதன்பிறகு, இந்த நிறுவனத்தின் பெயரில் 2014ம் ஆண்டு ஐடிபிஐ ரூ.523 கோடியை சிவசங்கரன் கடனாக வாங்கியுள்ளார். அதாவது, திவாலானதாக அறிவித்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே கடன் கொடுத்த வங்கியே கடன் வழங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. பின்னர் இந்த நிறுவனங்களின் மீது கடன் மோசடி புகார் செய்யப்பட்டது. அப்படியும் சிவசங்கரன் கடனை செலுத்தவில்லை. அதற்குள், கடனை திருப்பிச் செலுத்தாததால் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவை தொகை ரூ.600 கோடியை தாண்டியது. இது குறித்து ஐடிபிஐயின் புகாரை தொடர்ந்து சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

* ஒன்றிய பாஜ அரசில் அதிகரிக்கும் கடன் மோசடிகள்

ஒன்றிய பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வங்கிக் கடன் மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து வந்துள்ளன. கிங் பிஷர்ஸ் விஜய் மல்லையா, கீதாஞ்சலி ஜெம்ஸ் மெகுல் சோக்ஷி, விஸ்டம் டயமண்ட்ஸ் ஜதின் மேத்தா, ஏபிஜி ஷிப்யார்ட் ரிஷி கமலேஷ் அகர்வால் உட்பட பெரிய முதலாளிகள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், திருப்பிச் செலுத்தும் வசதியிருந்தும் வேண்டுமென்றே ஏமாற்றி விட்டனர். இவ்வாறு பெரிய நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2.09 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்ததாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இத்துடன் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.57 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.15,31,453 கோடி தள்ளுபடியாகியுள்ளது. இவை தள்ளுபடியல்ல தள்ளி வைப்பு என நிதியமைச்சர் புது விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இவற்றில் கால்வாசி கூட வசூலாவதில்லை. உதாரணமாக கடந்த 3 ஆண்டுகளில் தள்ளிவைக்கப்பட்ட ரூ.5,86,891 கோடியில் வெறும் ரூ.1,09,186 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த கடன் தொகையில் 18.6 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போன்ற சாமானியர்கள் கடன் தொகையை திருப்பி செலுத்தாதபோது அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து வங்கிகள் நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால், பெரிய நிறுவன முதலாளிகளுக்கு இப்படி தாராளம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

The post ஐஎல் அண்ட் எப்எஸ் பண பரிவர்த்தனை மோசடி மக்களின் வரிப்பணத்தை அபகரிக்க திட்டமிட்டு சதி செய்த சிவசங்கரன்: வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivasankaran ,IL ,Chennai ,FS ,
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து