×

விண்வெளியில் சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கை கோள்களை ஏற்கனவே விண்ணில் செலுத்தியுள்ளோம். விண்வௌியில் வியத்தகு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, சமீபகாலமாக வணிக ரீதியிலும் வெற்றி கண்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளி திறமைகளை கண்டு வியந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டின் செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவிட இந்தியாவின் உதவியை நாட தொடங்கியுள்ளன. கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியா பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் கூட வர்த்தக ரீதியாக விண்ணிற்கு அனுப்பி வருகிறது.

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி தாய்நாட்டு பெருமைகளை பறைசாற்றுவதிலும், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருவாயை ஈட்டுவதிலும் இஸ்ரோவின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது. இந்திய விண்வெளி பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக போற்றத்தக்க வளர்ச்சியை பெற்று விட்டது. கடந்த ஓராண்டுக்குள் பிரிட்டன் நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 72 இணைய சேவை செயற்கை கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதித்தது.

அந்த வகையில் தற்போது சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட டிஎஸ்-சார் என்னும் பிரதான செயற்கை கோள் உள்பட 7 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட், பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் சீறி பாய்ந்ததோடு, 535 கிமீ உயரத்தில் பூமத்திய ரேகை செயற்கை கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. ராக்கெட் ஏவும் பணி வெற்றியடைந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏவப்பட்ட ராக்கெட் 44.4 மீட்டர் உயரமும், 278.84 டன் உந்துவிசை எடையும் கொண்டதாகும்.

விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கை கோள்களில் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் விஞ்ஞானி சண்முகசுந்தரம் செல்லத்துரை வடிவமைத்த 3 நானோ செயற்கை கோள்களும் அடங்கும். இவர் வடிவமைத்த ஏர்காப்ஸ், வேலாக்ஸ் ஏ,எம், ஸ்கூப்2 ஆகிய 3 செயற்கை கோள்களும் விண்ணில் சீறிபாய்ந்தன. சென்னையில் ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் படித்த இவர், தற்போது சிங்கப்பூர் என்டியூ பல்கலையில் பணியாற்றி வருவது நமக்கு பெருமையாகும். கடந்த 14ம் தேதியன்று இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இப்போது பிஎஸ்எல்வி சி 56 விண்கலமும் இஸ்ரோவால் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டு விட்டது. விண்வெளியில் நாம் சாதிக்கிறோம் என்ற பெருமை ஒருபக்கம், இவற்றால் இந்திய விண்வெளி பொருளாதாரம் கணிசமாக உயரக் கூடும். வரும் 2025ம் ஆண்டில் இந்திய விண்வெளி பொருளாதாரம் சுமார் 1.07 லட்சம் கோடி வருவாயை ஈட்டும் என கூறப்படுகிறது. சாதனைகளும், வணிகமும் சரிசமமாக கலக்கும்போது விண்வெளியில் வெற்றிகள் வசப்படும் என்பதை இஸ்ரோ நிரூபித்து வருகிறது.

The post விண்வெளியில் சாதனை appeared first on Dinakaran.

Tags : ISRO ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...