×

7 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது: புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தம்

சென்னை: ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் நேற்று காலை 7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அவை அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதேசமயம் சில தனியார் செயற்கைக்கோள்களையும், புவியியல் ரீதியாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான நில அமைப்பு இல்லாத நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவ உதவி வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 6.30 மணிக்கு, முதல் ஏவுதளத்தில் இருந்து 7 செயற்கைக்கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 24 நிமிடம் 6 வினாடியில் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில், 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்- சார்’ என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. இந்த ‘டிஎஸ்- சார்’ என்ற பிரதான செயற்கைக்கோள், டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் மேலும் 6 துணை செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்பட்டது.

23 கிலோ எடை கொண்ட ‘விகிலேக்ஸ்- ஏஎம்’ என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ஆர்கேட்’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘நியூலயன்’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், ‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஏவப்பட்ட 7 செயற்கைக்கோள்களும் 24 நிமிடம் 6 வினாடியில் திட்டமிட்டபடி விண்ணில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இந்த ‘டிஎஸ்- சார்’ செயற்கைக்கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இதனால் அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும்.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது தொடர்பாக இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் கூறியதாவது: ஆறு துணை செயற்கைக்கோள்கள் ஒரு முதன்மை செயற்கைக்கோள் என ஏழு செயற்கைக்கோளை கொண்ட பிஎஸ்எல்வி-சி 56 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏழு செயற்கைக்கோள்களும் விண்ணில் சரியான சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இந்த டி.எஸ்.எல்.வி-சி 56 ஏவுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக சிங்கப்பூர் அரசு எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மற்றொரு ராக்கெட் ஏவப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தேவையான செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கும் இஸ்ரோ தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் ககல்யான், எஸ்.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி உள்ளிட்ட ராக்கெட் ஏவப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். திட்ட இயக்குனர் பிஜு கூறியதாவது: வெற்றிகரமாக யற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 536 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. 530- 570 கிலோ மீட்டர் உயரம் வரை அதிக அளவில் விண்வெளி கழிவுகள், அதிக அளவிலான செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதையாக உள்ளது.

அதனால் 350 கிலோமீட்டர் புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவது குறித்து இன்று அனுப்பப்பட்ட ராக்கெட்டில் உள்ள பிஎஸ்-4, 4வது நிலை மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.

*3 செயற்கைக்கோளை வடிவமைத்த தமிழர்
சிங்கப்பூரில் உள்ள என்.டி.யு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுப்பப்படும் ஏர்காப்ஸ், வேலாக்ஸ் – ஏ. எம், ஸ்கூப் – 2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை அரியலூர் ஐயப்பன் நாயக்கன் பட்டியை சேர்ந்த சண்முகம் சுந்தரம் செல்லதுரை வடிவமைத்துள்ளார். இவர் சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். மேலும், செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் தற்போது சிங்கப்பூர் என்.டி.யு. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 7 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது: புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Earth ,Chennai ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா