×

கோட்டையூர் – அழகர்கோவிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டு வண்டிகளில் பயணம்

திருப்புத்தூர்: குலதெய்வ வழிபாட்டிற்காக கோட்டையூரை சேர்ந்தவர்கள் 30 மாட்டு வண்டிகளில் அழகர்கோவிலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் வேலங்குடி மற்றும் சுற்றியுள்ள 18 கிராம நாட்டார்களின் உறவின் முறையினர், பங்காளிகள் பல தலைமுறையாக மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள தங்களது குலதெய்வத்தினை வணங்குவதற்காக மாட்டுவண்டியில் பயணிப்பதை தற்போது கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான பயணமாக வேலங்குடி பிள்ளையார் கூடத்திலிருந்து கடந்த 28ம் தேதி 30 வண்டிகளில் இரட்டை மாடுகள் பூட்டி புறப்பட்டனர். முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவர்கள் வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்புத்தூர் வந்தடைந்து, எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கினர்.

நேற்று மாலை 4 மணியளவில் எஸ்.எஸ்.கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு மேலூரில் தங்கினர். இன்று அதிகாலை புறப்பட்டு அழகர்கோவில் சென்றடைந்து தீர்த்தமாடுதலில் பங்கு பெறுகின்றனர். நாளை தங்களது நேர்த்திக்கடனான கிடாவெட்டு நிகழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்குகின்றனர். பின்பு தேரோட்டத்தில் பங்கேற்று விட்டு அதே மாட்டு வண்டியில் ஊர் திரும்புவர். இதுகுறித்து இவர்கள் கூறுகையில், ‘‘தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியிலும் போக்குவரத்து துறையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும், குலதெய்வ வழிபாட்டிற்கு மாட்டுவண்டி பயணத்தை கடைபிடிக்கிறோம். இது இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், இந்த மாட்டு வண்டி பயணம் எங்கள் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் கடைபிடித்து வருகிறோம்’’ என்றனர்.

The post கோட்டையூர் – அழகர்கோவிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டு வண்டிகளில் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kotayur ,Alaghar ,Tiruputhur ,Kotdaiyur ,Alagharkovil ,Sivagangai District ,Kotdaiyur Velangudi… ,Alaghar Kovil ,
× RELATED மலைக்கு புறப்பட்டார் அழகர்