×

மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி இறங்கி இந்துக்கள் நேர்த்திக்கடன்: சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்

சாயல்குடி: மொகரம் பண்டிகையை முன்னிட்டு கடலாடியில் நடந்த சமூக நல்லிணக்க திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற நிலக்கிழார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மறைவிற்கு பிறகு, அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை நாளில் பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நேற்று அதிகாலையில் பூக்குழி இறங்கி இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுகுறித்து மேலக்கடலாடி கிராம மக்கள் கூறும்போது, ‘‘கடலாடி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். பெரும் நிலக்கிழார் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற முஸ்லீம், இப்பகுதியினருக்கு விவசாய நிலங்கள் வழங்கி கண்மாய், வரத்து கால்வாய், குளங்களை அமைத்து தானமாக வழங்கியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் மறைவிற்கு பிறகு அவர் நினைவாக இப்பகுதி இந்து, முஸ்லீம் மக்கள் சேர்ந்து மொகரம் பண்டிகையின் போது பூக்குழி எனப்படும் தீ மிதி திருவிழா கொண்டாடப்படுகிறது’’ என்றனர். பூக்குழி அன்று வீடுகளில் தயாரிக்கப்பட்ட புளி, இனிப்பு, ஏலக்காய், சுக்கு கலந்த பானாக்கம் செய்து, இதனை மது குடம் என பாவித்து ஊர்வலமாக வந்து, பச்சரிசி, சர்க்கரை கலந்து தயார் செய்யப்பட்ட ரொட்டியை சேர்த்து மண் குடுவையில் அடைத்து, அதனை பூக்குழி உள்ள இடத்தில் புதைத்து வைக்கப்படுகிறது, அதனை மறு வருடம் எடுத்து திருவிழாவில் வைத்து வழிபாடு செய்து, பிரசாதமாக சாப்பிடப்படுகிறது. புதைக்கப்படும் மண் குடுவையில் தேள், நண்டு இருந்தால் அந்தாண்டு விவசாயம் செழிக்கும் என நம்பிக்கை தற்போது வரை உள்ளது.

The post மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி இறங்கி இந்துக்கள் நேர்த்திக்கடன்: சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம் appeared first on Dinakaran.

Tags : Mogaram festival ,Hindus ,Chayalgudi ,Kadladadi ,Ramanathapuram… ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...