×

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே கிராசிங்கில் சுரங்கபாதைக்கு மண் தோண்டும் பணி : 80 மீ. நீளம், 8 மீ. அகலத்தில் அமைகிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதைக்காக மண் தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த சுரங்கப்பாதை 80 மீ. நீளத்தில் அமைகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரயில் நிலையம் அருகில் இருப்பதால், ரயில்கள் இன்ஜின் மாற்றும் போது கூட ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் இந்த ரயில்வே கேட் பூட்டியே இருக்கும். நாள் ஒன்றுக்கு 45 முதல் 50 தடவை கேட் மூடப்படும். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் சுரங்கநடைப்பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஊட்டுவாழ்மடம் வசந்தம் குடியிருப்போர் நல சங்கம், குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. பொன். ராதாகிருஷ்ணன் ஒன்றிய அமைச்சராக இருந்த சமயத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டார்.

அப்போது சுரங்கப்பாதை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, ஊட்டுவாழ்மடத்தில், சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கின. முதலில் சுரங்கப்பாதை பணிக்காக தற்போது உள்ள ரயில்வே கேட் 4 மாதங்கள் வரை மூடப்படும் என்றும், மக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 4 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை வரும். எனவே ஊட்டுவாழ்மடம் ரயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைத்து ரயில்வே கேட் வசதி ஏற்படுத்தி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊட்டுவாழ்மடம் ரயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தற்காலிக பாதையில் தனியாக ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது சுரங்கம் அமைக்க மண் தோண்டும் பணி கடந்த இரு நாட்களாக நடந்து வருகிறது. சுரங்கம் அமைப்பதற்கான தளவாட பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதை சுமார் 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் அமைகிறது. நீளம் சுமார் 80 மீட்டர் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே கிராசிங்கில் சுரங்கபாதைக்கு மண் தோண்டும் பணி : 80 மீ. நீளம், 8 மீ. அகலத்தில் அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Ootujimadam Railway Crossing ,Nagercoil ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...