×

சிசிடிவி கேமரா, கிரானைட் பெஞ்சுகள், பூங்காவுடன் ரூ.3 கோடியில் சேலம் பள்ளப்பட்டி ஏரி சீரமைப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

சேலம்: சேலம் பள்ளப்பட்டி ஏரி ரூ.3 கோடியில் சீரமைக்கப்படுகிறது. இதில் சிசிடிவி கேமரா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், கிரானைட் பெஞ்சுகள் அமைக்கப்படுகிறது. சேலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை சீரமைக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி மறு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 44 ஏக்கரில் உள்ள பள்ளப்பட்டி ஏரிக்கு, ஏற்காட்டில் இருந்து அஸ்தம்பட்டி, டிவிஎஸ் ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. இதில் கழிவு நீரும் கலந்து வந்தது. இதையடுத்து, பள்ளப்பட்டி ஏரியை மறு சீரமைக்கும் வகையில், ரூ.29 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஏரியை சுற்றி கம்பிவேலி அமைத்தல், ஏரிக்கரை வலுப்படுத்துதல், நடைபாதை, புல்வெளிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. ஏரிக்கு வரும் கழிவு நீரை வண்டிப்பேட்டை சுத்திரகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் திருப்பி விடப்பட்டு, சுத்திகரிப்பு செய்த நீரை ஏரிக்கு கொண்டு வரும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட பள்ளப்பட்டி ஏரியை, கடந்த மாதம் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக ஏரியில் மேலும் பல பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதில், 50 சிசிடிவி கேமரா, பொதுமக்கள் அமர்வதற்கு கிரானைட் பெஞ்சுகள், செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறிய அளவில் உடற்பயிற்சி கூடம், ஏரியின் முகப்பு அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிக்கு கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், சேலத்தில் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக 20.26 ஏக்கரில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியை மறு சீரமைப்பு, அபிவிருத்தி பணிக்கு ரூ.19 கோடியும், 86 ஏக்கரில் அமைந்துள்ள மூக்கனேரியை மறுசீரமைப்பு பணிக்கு ரூ.23 கோடியும், 23.65 ஏக்கரில் அமைந்துள்ள அல்லிக்குட்டை ஏரி அபிவிருத்தி பணிக்கு ரூ.10 கோடியும் என 3 ஏரிகள் மறு சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளப்பட்டி ஏரி சீரமைப்பு பணிகள், ரூ.3 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமரவதற்கு கிரானைட் பெஞ்சுகள், சிசிடிவி கேமரா, சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், புல் தரை வெளிகள்அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரிகளிலும் கரைகள் மேம்படுத்துதல், ஆழப்படுத்துதல், பூங்கா, மின் விளக்குகள் அமைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post சிசிடிவி கேமரா, கிரானைட் பெஞ்சுகள், பூங்காவுடன் ரூ.3 கோடியில் சேலம் பள்ளப்பட்டி ஏரி சீரமைப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem Schoolpatti Lake ,Salem ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...