×

கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்லக்குடி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடியை மையமாக கொண்டு வடுகர்பேட்டை, புதூர்பாளையம், புள்ளம்பாடி, கோவண்டகுறிச்சி, கல்லகம், புள்ளம்பாடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் பள்ளிகள், சிமெண்ட் நிறுவனங்கள், சிறுசிறு கம்பெனிகள் மற்றும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம் நெல், கரும்பு பயிரிடும் விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்னை செல்ல வேண்டும் என்றால் கல்லக்குடி ரயில் நிலையத்தை அடைந்துதான் செல்வதுண்டு. கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், கடலூர் பாசஞ்சர், விருத்தாசலம் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்வது வழக்கமாக காணப்பட்டது. கல்லக்குடி ரயில் நிலையத்தில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்து செல்லும் வசதியும் காணப்பட்டது. இதனால் வியாபாரிகள், சிமெண்ட் ஆலையில் பணிபுரிவோர், விவசாயிகள், கல்லூரி செல்வோருக்கு பெரிதும் உதவியாக காணப்பட்டது. 1953ம் ஆண்டு கல்லக்குடி பேரூராட்சியின் பெயரை டால்மியாபுரம் என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் போராட்டத்தை நடத்தி மீண்டும் கல்லக்குடியாக பெயர் சூட்டப்பட்ட பெருமைக்குரிய கல்லக்குடி-பழங்காநத்தம் உள்ள ரயில் நிலையமாகும்.

இப்படி சிறப்புபெற்ற ரயில் நிலையத்தில் திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை மார்க்கமாகவும், சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2 வருடங்களாக நின்று செல்வது இல்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கடலூர் பாசஞ்சர், விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் ஆகிய ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு கல்லக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. ஆனால் திருச்சி – சென்னை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மட்டும் கல்லக்குடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் இதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்வாதாரத்திற்காக செல்வோர் அரியலூர் மற்றும் லால்குடி ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ரயில்வே துறை அதிகாரிகள் கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என கல்லக்குடி பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Malaikottai Express ,Kallakudy railway station ,Lalgudi ,Kallakudi railway ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...