×

சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்: காவல் ஆணையர் பெற்றுக்கொண்டார்

சென்னை, ஜூலை 30: சென்னை காவல், வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஓ 9001: 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார். பொதுமக்களுக்கு குற்றம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்துடனும், தமிழக முதல்வரின் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களும், காவல் கரங்கள் செயல்பாடுகள் தொடர்பான குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் பொதுமக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையங்களில் வரவேற்பு அறையானது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு சீருடையுடன் கூடிய வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு புகார்தாரர்களை அமரவைத்து கணிவுடனும், மனித நேயத்துடனும் குறைகளை கேட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. காவல் நிலையத்தின் உட்புறம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் மெச்சத்தக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மின் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. காவல் நிலைய வளாகம் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்க வசதியாக காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பணிச்சூழலை உருவாக்கியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை காவல் பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தூய்மையாக வைக்கப்பட்டு, அனைத்து ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலைய காவலர்களுக்கு பணி தொடர்பாகவும் பொதுமக்களிடம் பணிவுடனும், மனிதநேயத்துடன் நடந்து கொள்ள அறிவுரைகளும், தமிழக முதல்வரின் அறிவுரைப்படி காவலர்களுக்கு வார ஓய்வும், உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஓய்வும் வழங்கப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்களுக்காக ஒரு அறை தயார் செய்யப்பட்டு அமர்வதற்கான உரிய இருக்கைகள் மற்றும் தரமான குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல காவல் நிலைய வளாகத்தில் பசுமை தோட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மகளிர் தொடர்பான புகார்தாரர்கள் வரும்போது அவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு அவர்களுடைய குறைகளை பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கனிவுடன் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை ஆளிநர்கள் வாகனங்களை தனித்தனியாக நிறுத்துவதற்கு போதிய வாகனம் நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாக கொண்டு, இந்திய அரசின் தர கவுன்சில் வழங்கும், இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழை, (க்யூ.சி.ஐ-ஜி.ஓ.ஐ) சென்னை காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு 16.11.2022 அன்று வழங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை காவல்துறை, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வண்ணாரப்பேட்டை,தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பாலம், எம்.கே.பி நகர், கொடுங்கையூர் மற்றும் செம்பியம், ஆகிய 15 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ தர சான்றிதழைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை, கட்டிட பராமரிப்பு போன்ற உள்கட்டமைப்பு கூறுகளை பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும், வசதியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேர்மறையான சுற்றுச் சூழலை அளிக்க, இயற்கை சூழல் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையப் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. செயல்முறை மற்றும் உள்கட்டமைப்பு கூறுகள் ஆகிய இரண்டிலும் தரநிலைகளின் தேவைகளை இக்காவல் நிலையங்கள் பூர்த்தி செய்துள்ளது. நேற்று காலை வடக்கு கடற்கரை காவல் நிலைய, வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், Quest Certification (P) Ltd என்ற அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்பு, காவல் நிலையங்களை வெவ்வேறு நிலைகளில் தணிக்கை செய்து சரிபார்த்து அதன் சி.இ.ஓ. கார்த்திக்கேயனிடமிருந்து 15 காவல் நிலையங்களுக்கான ஐ.எஸ்.ஓ. 9001: 2015 தர சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இணை ஆணையாளர் (வடக்கு மண்டலம்) ரம்யா பாரதி, துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, புகார் பெட்டிகள் வைத்து அதில் பொதுமக்கள் சார்பில் போடப்படும் புகார்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் உரையாடுவது, காவல் நிலையத்தை சுகாதாரமாக நிர்வகிப்பது, வழக்கு ஆவணங்களை முறையாக பேணுதல், வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 20 விதிமுறைகளை கடைபிடித்து வந்த காவல் நிலையங்களுக்கு தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

The post சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்: காவல் ஆணையர் பெற்றுக்கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Chennai North Zone ,Chennai ,Chennai Police ,North Zone… ,Commissioner ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்