×

காங்கிரசில் இருந்து விலகி வந்த அனில் அந்தோணிக்கு பாஜவில் செயலாளர் பதவி: தேசிய நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணிக்கு பாஜவில் தேசிய செயலாளர் பதவியும், அலிகர் முஸ்லிம் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் மன்சூருக்கு தேசிய துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜ கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியலில் முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதன்படி, 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் மற்றும் 13 செயலாளர்கள் பதவிகளுக்கான புதிய பட்டியலை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டார். அதில், தமிழக பாஜ பொறுப்பாளரான சி.டி. ரவி மற்றும் அசாம் எம்பி திலீப் சைகியா ஆகியோர் தேசிய பொதுச் செயலாளர் பட்டியலில் இருந்தும், வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர், மேற்கு வங்க எம்பி திலீப் கோஷ் ஆகியோர் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள சட்டீஸ்கர் மாநில தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அம்மாநில மாநிலங்களவை எம்பி சரோஜ் பாண்டே மற்றும் பழங்குடியின தலைவரான லதா உசேண்டி ஆகியோர் தேசிய துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணிக்கு தேசிய செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. பிபிசி ஆவணப் பட விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரசில் அனில் அந்தோணிக்கு எதிர்ப்பு வலுத்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்த நிலையில் தற்போது தேசிய செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்.

அலிகர் முஸ்லிம் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் மன்சூர் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகி பாஜ கட்சியில் சேர்ந்ததைத் தொடர்ந்து உபியில் சட்டமேலவை உறுப்பினராக்கப்பட்டார். தற்போது தேசிய துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது. இவர் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட பஸ்முண்டா வகுப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் தெலங்கானா மாநில பாஜ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

* 9 பெண்களுக்கு வாய்ப்பு
பாஜவின் தேசிய துணைத் தலைவர்கள் பட்டியலில் 5 பெண்களும், செயலாளர்கள் பட்டியலில் 4 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். பொதுச் செயலாளர்கள் பட்டியலில் பெண்கள் யாருமில்லை. முன்னாள் முதல்வர்களான ராமன் சிங், வசுந்தரா ராஜே மற்றும் ரகுபர்தாஸ் ஆகியோர் மீண்டும் தங்கள் துணைத்தலைவர் பதவியை தக்க வைத்துள்ளனர். அருண் சிங், கைலாஷ் விஜயவர்கியா, துஷ்யந்த் குமார் கவுதம், தருண் சங், சுனில் பன்சால், வினோத் தாவ்டே ஆகியோர் பொதுச் செயலாளர்கள் பதவியை தக்க வைத்துள்ளனர்.

The post காங்கிரசில் இருந்து விலகி வந்த அனில் அந்தோணிக்கு பாஜவில் செயலாளர் பதவி: தேசிய நிர்வாகிகள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Anil Anthony ,Congress ,Baja ,New Delhi ,Senior Leader ,A. K.K. Anil Anthony ,Aligarh Muslim University ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...