×

2019 சட்டப்பேரவை தேர்தலில் அருணாச்சலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவழித்த கட்சிகள்: ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம்; கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

இடாநகர்: தார்மீக பண்புகள் இல்லாததே தேர்தலில் பணபுழக்கம் அதிகரிப்புக்கு காரணம் என்றும் கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.60,000 கோடி வரை செலவழித்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. அருணாச்சல பிரதேச மாநில எலெக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் மீடியா சங்கத்தின் சார்பில் 11வது ஆண்டு விழாவையொட்டி மாநாடு நேற்று நடந்தது. இதையொட்டி, தேர்தலில் பண கலாசாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

இதில், அருணாச்சல் தொழில் மற்றும் வர்த்தகர் சங்கத்தின் செகரட்டரி ஜெனரல் டோகோ டட்டூங் பேசுகையில், ‘‘பணம் இல்லாமல் தேர்தலை நடத்துவது அல்லது தேர்தலில் நிற்பது இயலாத காரியம் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்பு கொள்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அரசியல் கட்சிகள் ரூ.60,000 கோடியை செலவழித்துள்ளன’’ என்றார். முன்னாள் விமான படை அதிகாரி விங் கமாண்டர் கியாட்டி காகோ கூறுகையில்,‘‘ அருணச்சல் பிரதேசத்தில் தேர்தல் என்றால் பணம் மற்றும் விருந்து என ஆகிவிட்டது.

மக்களிடம் உள்ள தார்மீக பண்புகள் குறைந்துள்ளதே இதற்கு காரணம். 2019ம் ஆண்டு தேர்தலில் சராசரியாக ஒரு வாக்குக்கு ரூ.25 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைவர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்கு எதிராக மக்கள் எதுவும் சொல்வது இல்லை’’ என்றார். மாணவர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் டோபோம் டெய் பேசுகையில்,‘‘ தேர்தல் ஆணைய அதிகாரிகளை அரசு நியமிக்கும் போது, அது எப்படி வெளிப்படையாகவும்,நேர்மையாகவும் செயல்படும்’’ என்றார்.

The post 2019 சட்டப்பேரவை தேர்தலில் அருணாச்சலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவழித்த கட்சிகள்: ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம்; கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Arunachal ,2019 assembly elections ,Itanagar ,
× RELATED அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை