×

கூட்டணிக்கு முழுக்குப் போட வற்புறுத்தும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் அணியின் மாஜி அமைச்சர் மவுனத்திற்கு காரணம் என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்தில் அடுத்த மாதம் நடக்க உள்ள மாநாட்டிற்காக சேலத்துக்காரர் அணியில் உள்ள இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம். கூட்டத்தை அதிகளவு காண்பிக்க ‘விட்டமின் ப’ கொடுத்து முடிக்கப்பட்டுள்ளதாம். மனுநீதி சோழன் மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் கூட்டத்தை காண்பிக்க நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளாராம். ஆனால், கடலோர மாவட்ட இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் மவுனமாக இருந்து வருகிறாராம். இதுவரையிலும் அவர் சைலண்டாக இருந்து வந்தாராம். இனிமேலும், அவர் அமைதியாக தான் இருக்க போராறாம். இதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் சேலத்துக்காரர் அணி தீவிரமாக இறங்கியுள்ளதாம். ஒருவேளை மாநாட்டிற்கு எதிர்பார்த்த அளவு கூட்டத்தை கடலோர மாவட்ட இலை கட்சி அமைச்சர் அழைத்து செல்லவில்லை என்றால் அதிரடி நடவடிக்கை இருக்க வாய்ப்பு உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணிக்கு முழுக்கு போட இலை தலைமை தீர்மானிச்சிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சோலியை முடிக்க, மலராத கட்சி திட்டம் போட்டு செயல்பட்டது உலகத்துக்கே தெரிஞ்சிப் போச்சாம். மம்மி மறைவுக்கு பிறகு, கட்சி ரெண்டா உடைஞ்சிப்போச்சி. தலைவர் பதவி யாருக்கு அப்டின்ற கோதாவுல சேலத்துக்காரர் வெற்றியும் பெற்றிருக்காரு. இலைக்கட்சி மாஜிக்களின் ஊழல் வழக்கு, அமலாக்க துறை வழக்குகளை கண்முன்னே கொண்டாந்து, அப்படியே தனது வலைக்குள் சிக்க வைக்க தாமரை கட்சி தலைவர்கள் ரககிய திட்டம் போட்டிருந்தாங்க. ஆனா இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட சேலத்துக்காரர், அவங்க வலைக்குள்ள சிக்கல. இதுக்கிடையில தான், டெல்லி தலைமையும் அதே திட்டத்தோட தான் இருந்திருக்கு அப்டின்றது வெட்ட வெளிச்சமாகி போச்சாம். இதனால, இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே கோபத்துல இருக்காங்களாம். தாமரை என்றாலே பத்து அடி தள்ளி நிக்கணுமுன்னு அவங்க மத்தியில பேச்சு எழுந்திருக்கு. நடைபயணத்துக்கு அழைப்பு விடுத்து, அதன் மூலமா இலைக்கட்சி தொண்டர்களை வரவழைக்க திட்டம் போட்டாங்க. அதனை எங்க தலைவரு முறியடிச்சிட்டாரு. அதனால தான், இலைக்கட்சி தலைவர்களின் திட்டங்களை மாஜி போலீஸ்காரர் நிறைவேற்றுவாருன்னு பேசறாங்க. அப்படின்னா எங்களது கட்சியை குளோஸ் செய்யத்தானே திட்டம் போட்டிருக்காங்க. எங்களது திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம். இனிமேல் கூட்டணி என்பது இலை மேல் விட்ட தண்ணீர் போலத்தான் இருக்கும். அக்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் நிர்வாகிகள் இனியாவது விழிச்சுக்கணும். நேரம் பார்த்து தாமரையை கழற்றி விடாவிட்டால் இலைக்கட்சி கதை மோசமாகிடும் என்கின்றனர் இலை நிர்வாகிகள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்டார் காக்கி பெயரை சொல்லி சம்திங் வேட்டை நடக்குதாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல லிங்கர் என்று முடியுற ஏரியாவுல தியேட்டருக்கு பக்கத்துலயே கடலோர கவிதைகள் படத்தோடு நாயகி பெயர் கொண்ட ஒரு ஓட்டல் இயங்கி வருது. இந்த ஓட்டல்ல பார் வசதியோட சரக்கு விற்பனையும் நடக்குறதாக புகார்கள் வந்திருக்குது. சட்டத்துக்கு விரோதமாக சரக்கு விற்பனையாகுறத காக்கிகள் கண்டுகுறதில்லையாம். கண்டுக்காம இருக்குறதுக்காக, அந்த ஓட்டல் உரிமையாளர் நல்லா கவனிக்குறாராம். முண்டாசு கவிஞனின் பெயரை கொண்ட 3 ஸ்டார் காக்கி பெயரை சொல்லி மாதா மாதம் காக்கி ஒருத்தர் தவறாமல் சம்திங் வாங்கிட்டு போறாராம். இந்த சம்திங் கவனிப்பு, சம்பந்தப்பட்ட 3 ஸ்டார் காக்கிக்கு தெரிந்துதான் நடக்குதா, இல்ல தெரியாம நடக்குதான்னு தெரியலையாம். இதனால மாவட்ட உயர் காக்கி சம்பந்தப்பட்ட காக்கிகள் கிட்ட விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியில இருந்து தூக்கப்பட்டவரு ஆர்ப்பாட்டத்துல இறங்குனது விவகாரம் ஆகியிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கொடைக்கானலில் தன்னோட லாட்ஜில் குடும்பத்துடன் தங்கியிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். அதனால காங்கிரஸ் தலைமை உடனடியாக அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தூக்கி அதிரடி காட்டிச்சாம். சிறையில 32 நாட்கள் வனவாசம் இருந்த அந்த மாவட்ட தலைவரு வெளியில் வந்து தானும் கட்சியில பொறுப்புல இருக்கிறேன்னு காட்டிக்கிட்டு இருக்காறாம். இது அந்த கட்சிக்காரங்களுக்கே பிடிக்கலயாம். மணிப்பூரில் நடந்த பெண்கள் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரா தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி எதிர்ப்ப காட்டுனாங்க. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, அதுவும் பாலியல் விவகாரத்தில் பதவியை இழந்தவரு மணிப்பூரில் நடந்த பெண்கள் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து தன்னோட தலைமையில ஆர்ப்பாட்டத்த நடத்தினாராம். இத கேள்விப்பட்ட சொந்த கட்சிக்காரங்களே இது என்ன கொடுமைன்னு விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு மாவட்ட தலைவர் தன்னோட தலைமையில எப்படி ஆர்ப்பாட்டம் நடத்தலாம்னு கட்சி தலைமைக்கு புகார தட்டிவிட்டுட்டாங்களாம். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும் இந்த விவகாரம் போய் சேர்ந்திருக்காம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அவர் மேல என்ன மாதிரியான அதிரடி காட்ட போகுதுன்னு காங்கிரஸ்காரங்க மத்தியில் பரபரப்பா பேசப்படுதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post கூட்டணிக்கு முழுக்குப் போட வற்புறுத்தும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,minister ,Chelatuchara ,Peter ,Dunga ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி