×

சென்னையில் கொரோனாவால் இறந்த மகனுக்கு கோயில் கட்டி எஸ்ஐ கும்பாபிஷேகம்

சாயல்குடி: சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி கொரோனாவால் இறந்த மகனுக்கு போலீஸ்காரர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள். சென்னையில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த மூத்த மகன் வேலாயுதம் (37), கடந்த 2020ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். சிறு வயது முதல் வள்ளலார் சுவாமியின் தீவிர பக்தரான வேலாயுதத்தை மயானத்தில் அடக்கம் செய்யாமல், ஆன்மிக முறைப்படி சாமியார்களை கொண்டு சடங்குகள் செய்து விவசாய இடத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த இடத்தில் ராமமூர்த்தி நாள்தோறும் விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளார். மேலும், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் விக்கிரகம் இல்லாமல் மகனுக்கு கோயிலும் கட்டினார். கடந்த 27ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. நேற்று முன்தினம் வேத மந்திரங்களுடன் கும்பாபிஷேகம் நடந்தது. மகனுக்கு தந்தை கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் கடலாடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் கொரோனாவால் இறந்த மகனுக்கு கோயில் கட்டி எஸ்ஐ கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : SI Kumbabhishekam ,Corona ,Chennai ,Chayalgudi ,Kumbabhishekam ,Ramanathapuram… ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...