×

நியோமேக்ஸ் நிறுவனம் மிரட்டலால் விருதுநகர் சிறப்பு முகாமில் 20 பேர் மட்டுமே புகார் மனு

விருதுநகர்: நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம் விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. புகார் அளிக்கக்கூடாது என நிறுவனம் தரப்பில் மிரட்டுவதால் 20 பேர் மட்டுமே மனு அளித்தனர். மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ்(பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இவர்கள் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இயக்குநர்கள் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுக்களை பெற நேற்று விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பி மேக்லினா ஐடன் மனுக்களை பெற்றார். முகாம் நடைபெற இருப்பதை அறிந்த நியோமேக்ஸ் நிறுவன ஏஜென்ட்கள் விருதுநகரில் நேற்று முன்தினம் தனியார் ஓட்டலில் கூட்டம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தால் பணம் கிடைக்காது என மிரட்டியதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் பெரிய அளவில் புகார் அளிக்க வரவில்லை. நேற்று நடைபெற்ற முகாமில் 20 பேர் மட்டும் புகார் அளித்தனர்.

The post நியோமேக்ஸ் நிறுவனம் மிரட்டலால் விருதுநகர் சிறப்பு முகாமில் 20 பேர் மட்டுமே புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Neomax ,Virudhunagar Armed Forces Grounds ,Neo Max Finance ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது