×

வரத்து குறைவால் மீண்டும் அதிகரிப்பு: கோயம்பேட்டில் தக்காளி விலை ‘கிடுகிடு’:  ஒரு கிலோ ரூ.150

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. விலை குறைந்த நிலையில் வரத்து குறைவால் அதிகரித்து இருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் கடந்த 26ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனையானது. வரத்து குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 வாகனங்களில் 400 டன்னுக்கு குறைவான தக்காளிகளே வந்தது.

இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை விவரம்: ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.22, சின்ன வெங்காயம் ரூ.150, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.56, பீன்ஸ் ரூ.100, முட்டைகோஸ், சவ்சவ் ரூ.20, முள்ளங்கி ரூ.15, பீட்ரூட், வெண்டைக்காய், கத்தரிக்காய் ரூ.40, காராமணி, பாவக்காய் ரூ.50, புடலங்காய், சுரக்காய் ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.45, முருங்கைக்காய் ரூ.40, சேமக்கிழங்கு ரூ.35, காலி பிளவர் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.65, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.250, பூண்டு ரூ.220, அவரைக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, எலுமிச்சை பழம் ரூ.80, நூக்கல், கோவைக்காய், கொத்தவரங்காய் ரூ.30, வண்ண குடமிளகாய் ரூ.170, பச்சை குட மிளகாய் ரூ.65, மாங்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்துள்ள நிலையில் பொடி தக்காளிகள் விற்பனை களை கட்டி வருகிறது. ஒரு கிலோ பொடி தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியை தமிழக அரசு வாங்கினால், தக்காளியின் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

The post வரத்து குறைவால் மீண்டும் அதிகரிப்பு: கோயம்பேட்டில் தக்காளி விலை ‘கிடுகிடு’:  ஒரு கிலோ ரூ.150 appeared first on Dinakaran.

Tags : Kitukidu ,Coimbatore ,Chennai ,Koyambedu ,Kidukidu ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...