×

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் வகையில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக பாடுபட வேண்டும்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் வகையில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக பாடுபட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இன்பா என்கிற ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் புரட்சிகரத் திட்டத்திற்கு, செயல் வடிவம் தந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மகளிருக்கான சொத்துரிமையைப் பெரியார்-அண்ணல் அம்பேத்கரின் வழி நின்று உறுதி செய்த முத்தமிழறிஞரின் பெயரில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” எனப் பெயரிட்டு, அத்தகைய பெருமைமிகு திட்டத்தைப் அண்ணா பிறந்த செப்டம்பர் 15ம் நாள் முதல் வழங்க உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட மாநில மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது. தகுதி வாய்ந்த அனைத்து மகளிரையும் இந்த உரிமை தொகை சென்றடையும் வகையில், செயல்பட்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறது.

* ஆர்வமுள்ள 16 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை, இல்லந்தோறும் சென்று அணியில் உறுப்பினராக இணைத்திடும், `இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பை முதன்மையானதாக ஏற்றுச் செய்திட வேண்டும் என மாவட்ட-மாநில-மாநகர- அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இந்த `இல்லந்தோறும் இளைஞர் அணி’ முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் புதிய இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்ப்பது,

* இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் மரக்கன்றுகள்-பனைவிதைகள் நடுதல், சுற்றுச்சூழல் காக்க தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல், ரத்ததான முகாம்கள், தேவையுள்ளோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் வழங்குதல் என மக்கள் பயனடையும் வகையிலும், திமுகவிற்கு பெருமை சேர்த்திடும் வகையிலும், மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பணிகளை, தமிழருக்கே ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

* சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும் சட்ட விரோத பழிவாங்கும் போக்கைக் கையாண்டு அரசியல் லாபம் அடையத் துடிக்கும் ஒன்றிய பாஜ அரசின் கோழைத்தனமான போக்கை இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களை முடக்கி வைப்பது, தமிழினத்தின் தலைமகன் அண்ணா, தமிழ் நிலப்பரப்புக்கு `தமிழ்நாடு’ என வைத்த பெயரை மாற்ற முனைவது, அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராகக் கருத்துகளை தெரிவிப்பது என ஆளுநராகச் செயல்படாமல் அரசியல்வாதியாகச் செயல்படத் துடிக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு இளைஞர் அணி பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

* சர்வாதிகாரப் போக்கில், மணிப்பூரில் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமருக்கும், அவர் தலைமையிலான ஒன்றிய பா.ஜ. அரசுக்கும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.

* தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கும், ஜனநாயகம் காக்கக் களமாடி வரும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இளைஞர் அணியின் அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் வாழ்த்து தெரிவித்து, கூட்டணியின் வெற்றிக்கு உழைக்க உறுதியேற்கிறது.

* கடந்த 2007ம் ஆண்டு திருவெல்வேலியில் நடந்த இளைஞர் அணியின் முதல் மாநாட்டை தலைமையேற்று, மிகுந்த எழுச்சியோடு சிறப்புற நடத்தினார் தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடைய வழியில் வீறுநடை போடும் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர் அணியின் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது, 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளைச் சிறப்புற மேற்கொள்ள இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் வகையில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக பாடுபட வேண்டும்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...