×

கர்நாடகா காங். அதிருப்தி எம்எல்ஏக்கள் வரும் 2ம் தேதி டெல்லிக்கு வர அழைப்பு: கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகின்றனர்

 

பெங்களூர்: கர்நாடகா காங்கிரசில் கோஷ்டி பூசல்களை சரி செய்வதற்காக வரும் 2ம் தேதி மூத்த தலைவர்களை டெல்லி வரும்படி அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர் பதவியை பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள், அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது. அதில் ‘அமைச்சர்கள், தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது. இந்த கடிதத்தை ஒரு சில எம்எல்ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையே கடந்த 27ம் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்தாண்டு எம்எல்ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள், மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2ம் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும் கட்சியின், சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

The post கர்நாடகா காங். அதிருப்தி எம்எல்ஏக்கள் வரும் 2ம் தேதி டெல்லிக்கு வர அழைப்பு: கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kong ,Delhi ,Karke ,Rahul ,Bangalore ,Koshti ,Karnataka Congress ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...