×

நோயால் துன்புறுவதை சகித்து கொள்ள முடியாததால் பேரனை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி: தாய் – தந்தை பிரிந்து வாழும் நிலையில் சோகம்

 

பிஜ்னோர்: தனது பேரன் நோயால் துன்புறுவதை பார்த்து சகித்து கொள்ள முடியாததால், அவரின் கழுத்தை நெரித்து கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் அடுத்த பாமர் கஞ்ச் பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் அவரது மனைவி ஷாமா பர்வீன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆர்ஷ் (12), சமத் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிஜ்னோரில் உள்ள அவரது பாட்டி பாந்தியா பானோ (56) வீட்டில் வசித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் முகமது ஆரிப் பணிபுரிகிறார்.

அவரது மனைவி ஷாமா பர்வீன், மொஹல்லாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுவன் சமத் திடீரென இறந்தான். தகவலறிந்த சமத்தின் தாயார் ஷாமா பர்வீன், தனது மாமியார் பாந்தியா பானோ தான், தனது மகனைக் கொன்றதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘எனது இளைய மகனை அவரது பாட்டியான பாந்தியா பானோ, அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார். அவனுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். அதனால் அவனது உடல் நிலை மோசமடைந்தது. தற்போது திடீரென எனது மகன் இறந்துவிட்டான்.

மகனின் சாவில் மர்மம் இருக்கிறது’ என்று அதில் தெரிவித்திருந்தார். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து பாந்தியா பானோவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிஜ்னோர் எஸ்பி நீரஜ் குமார் ஜடான் கூறுகையில், ‘மர்மமான முறையில் இறந்த சமத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரை கழுத்து நெரித்துக் கொன்றது உறுதியானது. அதனால் தனது பேரனை கொன்ற பாட்டி பாந்தியா பானோவை கைது செய்துள்ளோம். அவர் அளித்த வாக்குமூலத்தில், அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால், சமத்தை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பேரன் சமத் நோயால் தினமும் துன்புறுவதை பார்க்க முடியாததால் அவரை கொன்றதாக ஒப்புக் கொண்டார்’ என்றார்.

The post நோயால் துன்புறுவதை சகித்து கொள்ள முடியாததால் பேரனை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி: தாய் – தந்தை பிரிந்து வாழும் நிலையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Bijnor ,
× RELATED சீட் கிடைக்காததால் விரக்தி; மாயாவதி கட்சி எம்பி ஆர்எல்டியில் சேர்ந்தார்