×

நள்ளிரவில் பரபரப்பு: கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திடீர் நிலஅதிர்வு

 

அம்பத்தூர்: சென்னை கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான கோல்டன் பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு 9 தளங்களை கொண்டது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 3 கட்டிடத்தில் சுமார் 180 வீடுகள் உள்ளன. நேற்றிரவு அனைவரும் வழக்கம் போல சாப்பிட்டு படுக்கைக்கு சென்றனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு 2 மணியளவில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சிலர் அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் கொஞ்சம் கொஞ்சமாக இந்த குடியிருப்புகளுக்கு பரவியது. வீடுகளின் கதவுகளை தட்டி எழுப்பினர். என்னவென்று தெரியாமல் வெளியே ஓடி வந்தனர். 3 கட்டிடத்தில் இருந்த அனைவருமே வெளியே குடும்பத்துடன் வந்தனர்.

அப்போதுதான் பலருக்கு நில அதிர்வு பற்றிய தகவல் தெரியவந்தது. பல மணி நேரமாக சாலையில் தஞ்சமடைந்தனர். சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், நில அதிர்வு ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தனர். மேலும் கட்டிடத்தின் கட்டுமானம் பற்றி வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் விசாரிப்பதாக தீயணைப்பு துறையினர் என தெரிவித்தனர். விடிய விடிய தூ்ங்காமல் வீதிகளிலேயே பதற்றத்துடன் இருந்தனர். ஓரளவு பரபரப்பு ஓய்ந்த நிலையில் ஒருவித பதற்றத்துடன் அதிகாலை 4 மணியளவில் அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

இதுகுறித்து குடியிருப்புவாசி ராஜா கூறுகையில், ‘கொரட்டூரில் கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பு வழங்கப்பட்ட 2 மாதங்களில் கட்டிடத்தின் ஒருசில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர்கள் சரி செய்து கொடுத்தனர். மேலும் சரிசெய்யப்பட்ட கட்டிடத்தில் திருப்தியில்லாத காரணத்தால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து கட்டிடத்தின் உறுதிதன்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டிடத்தை சரிசெய்துதர வலியுறுத்தி 2 முறை போராட்டம் நடத்தியுள்ளோம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கட்டிடம் குலுங்கியது எங்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

எனவே, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கட்டிடங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். பொதுமக்கள் கூறுகையில், வீடுகளில் இருந்த மின்விசிறி, பொருட்கள் குலுங்கியது. கட்டில் ஆட்டம் கண்டது. சிலர் என்னவென்று தெரியாமல் தூக்கத்தில் இருந்தனர். அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி எழுப்பினர். அவர்களும் என்னவென்று தெரியாமல் வெளியே வந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு, நில அதிர்வு பற்றி தெரியவந்தது. வீடுகளுக்கு செல்வதா வேண்டாமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

நில அதிர்வா, கட்டிடம் பாதிப்பா?
வீட்டு வசதி வாரிய குடியிருப்பை, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சரிசெய்து கொடுத்துள்ளனர். அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நில அதிர்வா அல்லது கட்டிட விரிசலா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நில அதிர்வு என்பது இப்பகுதியில் மட்டும்தான் நடந்துள்ளது. மற்ற இடங்களில் தென்பட்டது போன்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உறுதிபடுத்த வேண்டும். அப்படி உறுதிபடுத்தும்பட்சத்தில்தான் இங்கு வசிப்பவர்கள், இந்த கட்டிடத்தில் இருக்கலாமா அல்லது வேறு இடங்களுக்கு மாறலாமா என்பதை முடிவு செய்வார்கள். அவர்களது சந்தேகமும் தீரும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டிடத்தை பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோருகின்றனர்.

The post நள்ளிரவில் பரபரப்பு: கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திடீர் நிலஅதிர்வு appeared first on Dinakaran.

Tags : Coratur Housing Facility ,Board ,Apartments ,Ambatore ,Golden Flats ,Tamil Nadu Housing Board ,Chennai ,Koratur ,Coratur ,Housing ,Facility ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...