×

பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பணியை விரைந்து மேற்கொள்ள 20 ஆட்டோக்கள்

*நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும், சுமார் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலிருந்தும் வெளியேற்றப்படும் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அந்தந்த வார்டு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு என தனித்தனியாக தள்ளுவண்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில வார்டுகளில் மட்டும் பேட்டரி வாகனங்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தூய்மை பணியை விரைந்து மேற்கொள்ள முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும்,குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்காக 15வது நிதி குழு மானியம் மூலம் மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனம் மற்றும் டீசலால் இயக்க கூடிய வாகனம் உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி பொள்ளாச்சி நகராட்சிக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தால் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.22லட்சம் மதிப்பிலான 10 பேட்டரி ஆட்டோவும். ரூ.10லட்சம் மதிப்பிலான டீசலால் இயக்க கூடிய 10 இலகு ரக வாகனம் வாங்கப்பட்டது. அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, பதினைந்தாவது மானியக் குழு மூலம் வாங்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான மின்சார வாகனம் மற்றும் டீசல் வாகனம் என மொத்தம் 20 வாகனங்களின் செயல்பாட்டு துவக்க விழா நேற்று, நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

இதில் நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களிடம், பேட்டரியால் இயங்கப்படும் வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 20 வாகனங்களின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகள என பலரும் கலந்து கொண்டனர். நகராட்சிக்கு, குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்துவதற்கு, இந்த வகனங்கள் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பணியை விரைந்து மேற்கொள்ள 20 ஆட்டோக்கள் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pollachi Municipality ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...