×

தஞ்சாவூர் மாநகராட்சியின் 4 ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்-மேயர் உறுதி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாநகராட்சியின் நான்கு ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உறுதி அளித்து உள்ளார்.தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 27ம்தேதி அன்று நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு வருகை தந்து பணிகளை பொதுமக்களுக்காக திறந்து வைத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாமன்ற மேயர், துணை மேயர், உறுப்பினர்களுக்கு மாதந்திர தொகுப்பூதியம் வழங்கியதற்காக தமிழக முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார். இக்கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, கலையரசன் ஆகியோர் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து பேசினர்.அவற்றுக்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது;-பழைய திருவையாறு பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கடை கட்டுவதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அகற்றப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியின் நான்கு ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூரில் முதலமைச்சரால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இதில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட பல்நோக்கு மாநாட்டு அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் பழைய திருவையாறு பஸ் நிலைய வணிக வளாகத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என்றும், சரபோஜி மார்க்கெட் முன்பாக புதிதாக கட்டப்பட்ட வரும் வணிக வளாகத்திற்கு பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் என்றும், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார்.இதன்பின்னர் துணை மேயர் அஞ்சுகம்பூபதி பேசுகையில், பெண் கவுன்சிலர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அதனால் பெண் கவுன்சிலர் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற பெண் கவுன்சிலர் ஒருவரின் குற்றசாட்டை ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை திறந்து வைத்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வார்டில் ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட மேயர் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சியில் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மட்டுமே சட்டத்தில் இடம் இருப்பதால், அதற்கு ஏற்ப தினமும் 6 நாய்களை பிடித்து அதற்கான வாகனத்தில் கொண்டு சென்று கால்நடை மருத்துவர்களால் கருத்தடை செய்யப்படுகிறது. மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்புக்கான அனுமதி சான்றை மாநகராட்சி தரவில்லை. இதுகுறித்து உரிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை நகரில் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்துவது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்.

The post தஞ்சாவூர் மாநகராட்சியின் 4 ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்-மேயர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Corporation ,Thanjavur Municipality ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...