×

கஜாபுயலின் சீற்றத்தால் காடு அழிந்த பகுதியில் 1000 அலையாத்தி மரக்கன்று நடவு

*முத்துப்பேட்டை வனத்துறையினர் ஏற்பாடு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை வனத்துறையினர் சார்பில் கஜாபுயலின் சீற்றத்தால் காடு அழிந்த பகுதிகளான முத்துப்பேட்டை துறைக்காடு காப்புக்காடு, கட்டமுனை பகுதியில் 1000 அலையாத்தி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐக்கியநாடுகள் சபை ஜூலை 26-ம் தேதியை உலக அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி முதல் வருடந்தோறும் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கால நிலை மாற்றத்தை சீர்செய்வதில் அலையாத்திக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அலையாத்தி மர இனங்கள் கார்பன் வரிசைப்படுத்துதல் என்று சொல்லக்கூடிய சுற்றுப்புறச்சூழலில் அதிகமாக பரவியுள்ள கார்பனை உறிஞ்சுதல் மூலம் அதன் வேர்கள், கிளைகள் மற்றும் இலைகளில் அதிக அளவு சேமித்து வைக்கக்கூடியது.

அலையாத்திக்காடுகள் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர்நீரில் வளரக்கூடிய ஒருவகை தாவர இனம். இவை பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் தமிழ்நாட்டில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடுகள் ஆகும். மொத்த பரப்பளவு 14 ஆயிரம் ஹெக்டேர். மூன்று பெரும் பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்கப்பகுதி தில்லை மரங்கள், நடுப்பகுதியில் நரிகண்டல் மரங்கள், இறுதியாக அலையாத்தி மரங்களாக காணப்படுகின்றன. இங்கு அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுரபுண்ணை போன்ற அலையாத்தி மரவகைகள் காணப்படுகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் துவக்கி வைக்கப்பட்ட பசுமைத்தமிழகம் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் ஆகிய திட்டங்களின் மூலம் காடுகளை மேம்படுத்தும் விதமாக சதுப்பு நிலப்பரபுகளில் அலையாத்திக்காடுகளை உருவாக்குதல், கஜாபுயலின் சீற்றத்தால் அழிந்த காடுகளை மறு நடவு செய்து உருவாக்குதல் மற்றும் பனைமரங்களை நடவு செய்தல் போன்ற பல பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக முத்துப்பேட்டை துறைக்காடு காப்புக்காடு, கட்டமுனை பகுதியில் 1000 அலையாத்தி மரக்கன்றுகள் வனத்துறையினரால் நடவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட வன அலுவலர் காந்த், வனச்சர அலுவலர் ஜனனி, சுற்றுச்சூழல் நிபுணர் சிவசுப்பிரமணியன், ஓம்கார் நிர்வாகி பாலாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், அபூபக்கர் சித்திக் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரையும் ஜாம்புவானோடை படகு துறையிலிருந்து படகு மூலம் அழைத்து செல்லப்பட்டு போகும், வழியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அலையாத்திகாடு பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

The post கஜாபுயலின் சீற்றத்தால் காடு அழிந்த பகுதியில் 1000 அலையாத்தி மரக்கன்று நடவு appeared first on Dinakaran.

Tags : Kajahuyal ,Muthuppet Forest Department ,Muthupet ,Muthupet Forest Department ,Kaja ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...