×

சிற்றாறு பட்டணங்கால்வாயை முறையாக தூர்வாரவில்லை என்றால் பில்தொகை வழங்கப்படாது

* அதிகாரி தகவல்

கருங்கல் : கருங்கல் அருகே சிற்றாறு பட்டணம் கால்வாயை சரிவர தூர்வாரவில்லை என்றால் அந்த ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்படாது என உதவி பொறியாளர் விஜயகுமார் அதிரடியாக அறிவித்துள்ளார். குமரி மேற்கு மாவட்ட பகுதியின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்காகவும் காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை.

இதனால் எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக, கரைகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக ராஜேஷ் குமார் சட்டமன்றத்திலும், துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜூம் கடை வரம்பு பகுதிகளில் தண்ணீர் வராததை சுட்டிகாட்டி தூர்வார கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் துரைமுருகனிடம் வலியுறுத்தினார்.இதையடுத்து கூடுதல் நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் சிற்றாறு பட்டணம் கால்வாயின் ஒரு பிரிவான கருங்கல் கால்வாய் தூர்வாரும் பணிக்காக₹17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் சுமார் 40 கி.மீ தொலைவுக்கு பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போதும் கருங்கல் பாலூர் பகுதி கால்வாயை முறையாக தூர்வாரவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள் மண்வெட்டியை பயன்படுத்தி கால்வாயில் இருந்த சகதியை அகற்றினர். பின்னர் அவர்கள் சிற்றாறு பட்டணம் கால்வாய் கருங்கல் பிரிவு உதவி பொறியாளர் விஜயகுமாரிடம் புகார் அளித்தனர்.

அப்போது பொறியாளர் விஜயகுமார் கூறும்போது, கருங்கல் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிந்த பிறகு முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது சரிவர தூர்வாரப்படவில்லை என தெரியவந்தால் ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய பில் தொகை கொடுக்கப்படாது. நன்றாக தூர்வாரினால் மட்டுமே அவர்களுக்கு அந்த தொகை கிடைக்கும் என்றார்.

The post சிற்றாறு பட்டணங்கால்வாயை முறையாக தூர்வாரவில்லை என்றால் பில்தொகை வழங்கப்படாது appeared first on Dinakaran.

Tags : Chithar ,Pattanag Canal ,Karungal ,Chithar Pattanam Canal ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று மாலை...